
திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் தொடருந்தில் மோதுண்டு இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று(17.10.2023) இரவு இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த டி. சலீம் என்ற 34 வயதுடைய இரண்டு பிள்ளையின் தந்தை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்னர்.
உயிரிழந்த நபர் முள்ளிப்பொத்தானை பகுதியில் உழவு இயந்திரத்தில் வயல் உழுது கொண்டிருந்த வேளையில் தூக்கமின்மை காரணமாக தொடருந்து தண்டவாளத்தில் தூங்கியுள்ளதாகவும், அதன்பின்னர் திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.