ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது அமர்வில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, குவைத் பிரதமர் ஷேக் சபா அல் ஹமாத் அல் சபாவை, நியூயோர்க்கில் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான 50 ஆண்டுகால நெருக்கமான மற்றும் நட்பு இராஜதந்திர உறவுகளை நினைவு கூர்ந்த இரு தலைவர்களும் உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று உறுதிபூண்டனர்.
குவைத்தில் அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் வேலை செய்வதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி கோட்டபாய, திறமையான தொழிலாளர்களுக்கு மேலும் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதையும், நாட்டில் மேற்கொள்ளப்படும் தடுப்பூசித் திட்டத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தொற்றுநோய் முடிவடைந்து உலகம் வழமைக்கு திரும்பும்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் சாத்தியத்தையும் சுட்டிக்காட்டினார்.
துறைமுக நகரம், சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் மற்றும் சுத்திகரிப்பு துறைகளில் குவைத் அரசிற்கு கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி, குவைத் பிரதமரின் கவனத்தை ஈர்த்தார்.
உணவு பாதுகாப்பு, கல்வி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்தும் அரச தலைவர்கள் கவனம் செலுத்தினர்.
இந்த கலந்துரையாடலில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே உட்பட பலரும் கலந்து கொண்டனர்.