
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் ,நேற்று இடம்பெற்றது.





இதன்போது ஈகைச்சுடர் ஏற்றி, மலர் அஞ்சலி தூவி, அக வணக்கம் செலுத்தப்பட்டது.
போர் சூழலில் யாழ்ப்பாணத்தில் இருந்து துணிவாக ஊடகப்பணியாற்றியவர் மயில்வாகனம் நிமலராஜன். பி.பி.சி.யின் தமிழ் மற்றும் சிங்கள சேவை , வீரகேசரி , ராவய போன்ற ஊடகங்களில் பணியாற்றி இருந்தார்.
இந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை இவரது வீட்டு வளவினுள் புகுந்த ஆயுத தாரிகள், வீட்டின் யன்னல் ஊடாக அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
இதன்போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார்.
கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர் , வீட்டின் மீது கைக் குண்டு தாக்குதலையும் மேற்கொண்டனர். அதன் போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம் , தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.