குற்றபு் புலனாய்வுத் திணைக்களம் (CID), அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கைக்கு அமைய இந்த தகவல் தெரியவந்துள்ளதாக குறித்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இந்த தகவலை உறுதிப்படுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதவானின் மனைவி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொாண்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எனினும் நீதவான் சரவணராஜாவுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் குறித்து, சட்டமா அதிபர் திணைக்களத்திடமோ அல்லது திணைக்களத்தின் அதிகாரிகளிடமோ விசாரணைகள் எதுவும் முன்னெடுத்ததாக குறித்த செய்தியில் குறிப்பிடப்படவில்லை.
“நீதிபதி சரவணராஜாவின் மனைவி, முல்லைத்தீவு மேலதிக நீதிபதி டி. பிரதீபன், முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.யூ.பீ. அமரதுங்க, முல்லைத்தீவு பொலிஸ் தலைமையக பதில் ஆய்வாளர் W.G.H.N.K. திலகரட்ன, நீதிபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி கொன்ஸ்டபிள் கே.எஸ். பிரேமன், தனிப்பட்ட பாதுகாப்பு கொன்ஸ்டபிள் கே. சிவகாந்தன், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தின் பொலிஸ் கொன்ஸ்டபிள் எம். முதிசன், முல்லைத்தீவு பொலிஸ் கொன்ஸ்டபிள் ஆகிய சமரகோன் மற்றும் சந்தருவன், முல்லைத்தீவு நீதிமன்ற பதிவாளர் பீ.சரவணராஜா, நீதிபதியின் அலுவலக எழுத்தர் பீ. சுசிகன், பிஸ்கல் எஸ். சிவக்குமார் மற்றும் முல்லைத்தீவு நீதிமன்ற உத்தியோகத்தர் ஜே. லின்டன் ராஜா” ஆகியோரிடம் சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி டி.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கடந்த 3ஆம் திகதி அந்த ஆணைக்குழு அறிவித்திருந்தது.
எனினும் நீதிச்சேவை ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கேட்டறிந்ததாக அந்த செய்தியில் எவ்வித தகவலும் குறிப்பிடப்படவில்லை.
சட்டமா அதிபர் அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக நீதவானை, சட்டமா அதிபர் திணைகளத்திற்கு அழைக்கவில்லை எனவும், நீதவான் என்ற அடிப்படையில், அவர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்காகவே அவர் கொழும்பிற்கு அழைக்கப்பட்டதாகவும், சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும் இந்த தகவல் தொடர்பிலும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கருத்துகள் எதனையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பதிவு செய்ததாக குறித்த தினமின செய்தியில் குறிப்பிடப்படவில்லை.
இதேவேளை, அரச அச்சு ஊடகங்களின் செய்திக்கு மூலாதாரமாக குறிப்பிடப்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை அறிக்கை இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.