கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் படைப்பாளிகளையும் அறிஞர்களையும் கௌரவிக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
கனடாவில் கடந்த 30 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிய வண்ணம் தமிழ் இலக்கியம் மற்றும் படைப்பிலக்கியத்தின் கூறுகளாக விளங்கும் கவிதை சிறுகதை ஆகிய துறைகளில் கருத்தரங்குகளையும் போட்டிகளையும் நடத்தி வரும் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஏற்பாட்டில் படைப்பாளிகளையும் அறிஞர்களையும் கௌரவிக்கும் விழாவின் தொடர்ச்சியாக இந்த வருடத்திற்குரிய விருதுகள் வழங்கும் விழா கடந்த 28-10-2023 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய தலைவர் அகணி சுரேஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்.தலைவர் அகணி சுரேஸ் தனது தலைமையுரையில் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய இயக்குனர் சபையின் அனைத்து உறுப்பினர்களும் வழங்கும் ஆதரவும் ஒத்துழைப்பும் தனது தலைமைப் பதவியை நேர்த்தியாகத் தொடர்வதற்கு பக்க பலமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
எழுத்தாளர் இணையத்தின் கடந்து வந்த பாதை என்று கருப்பொருளின் கீழ் உரையாற்றிய துணைச் செயலாளரும் இணையத்தின் ஆரம்பச் செயலாளராக பணியாற்றியவருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் கனடாவில் தமிழ் எழுத்தாளர் இணையத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற முனைப்போடு செயற்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து தாயகத்தின் எழுத்தாளர்களாக தங்கள் பணியை ஆரம்பித்து இன்றுவரை அதைத் தொடர்ந்து ஆற்றிவரும் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
கனடாவில் தற்போது வாழ்ந்த வண்ணம் தமிழ்ப் பணியையும் இலக்கியப் பணியையும் இணைந்தே ஆற்றிவரும் பத்து எழுத்துலகச் சிற்பிகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பெற்றன.
பேராசிரியர்கள் கலாநிதி இ. பாலசுந்தரம். பேராசிரியர் கலாநிதி நாகராஜ ஐயர் சுப்பிரமணியன், முனைவர் பால சிவகடாட்சம். முனைவர் செல்வநாயகி ஶ்ரீதாஸ்’, எழுத்தாளர் திரு தங்கராசா சிவபாலு. எழுத்தாளர் திரு சின்னையா சிவனேசன். எழுத்தாளர் திரு பாலா குமாரசாமி(தேவகாந்தன்), எழுத்தாளர் திரு ‘சிந்தனைப் பூக்கள்’ பத்மநாதன். கலைஞர் எழுத்தாளர் ‘சோக்கல்லோ சண்முகம்’ திரு தாமோதரம்பிள்ளை சண்முகநாதன். எழுத்தாளர் ‘வீணைமைந்தன்’ தெய்வேந்திரன் சண்முகராஜா ஆகிய பத்து படைப்புலகம் கலையுலகம் சார்ந்தவர்களுக்குவிருதுகள் வழங்கப்பெற்றன.
நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து சிறப்பித்த இந்த விழாவில் தமிழ் பேசும் அரசியல் தலைவர்களான எம்பிபி மற்றும் துணையமைச்சர் விஜேய் தணிகாசலம் மற்றும் நகரசபைக் கவுன்சிலர் யுனைற்றா நாதன் ஆகியோரும் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து உரையாற்றினர்.
மேற்படி விருதுகள் வழங்கும் விழா வெற்றிகரமாக நடைபெற கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தற்போதைய இயக்குனர் சபை உறுப்பினர்களான தலைவர் – அகணி சரேஸ், செயலாளர் கமலவதனா சுந்தா, பொருளாளர் அருட்கவி ஞானகணேசன், துணைத் தலைவர் குரு அரவிந்தன், துணைச் செயலாளர் ஆர். என்.லோகேந்திரலிங்கம், செயற்குழு உறுப்பினர்கள் திருமதி வாசுகி நகுலராஜா மற்றும் திருவாளர்கள் செ. ஜெயானந்தசோதி கணபதி ரவீந்திரன், ரவீந்திரநாதன் கனகசபை. இராச்குமார் குணரட்ணம், அனுரா வென்சிலாஸ் ஆகியோரும், மேலும் பல தொண்டர்களும் தங்கள் நேரத்தையும் பல்வேறு வகையான உதவிகளையும் அர்ப்பணித்திருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக எவ்வித தடையும் தொய்வும் இன்றி நகர்ந்து சென்ற இந்த விருது விழாவில் கலந்து கொண்ட அனைவரும் மிகவும் மகிழச்சியோடு இறுதிவரை அமர்ந்திருந்து அனைத்து நிகழ்வுகளை ரசித்தும் விருது பெற்றவர்களைப் பாராட்டியும் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியில் மதிய உணவும் அனைவருக்கும் வழங்கப்பெற்றது.