தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளை வழங்கும் ‘அற்றார் அழி பசி தீர்த்தல்’ என்ற திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது.
பகிர்ந்துண்டு வாழ்வோம்’ என்ற கருப்பொருளில் செயற்படுத்தப்பட்டுவரும் இத்திட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05.11.2023) அரியாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலருணவுகள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரரீதியான வருவாயைத் தேடித்தரவல்ல கறுவாச் செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு அனைவருக்கும் கறுவா மரக்கன்றுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான நிதி அனுசரணையை கனடாவின் இலங்கை முன்னாள் வர்த்தக சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ந.கேதீஸ்வரசிவம் அனுப்பிவைத்துள்ளார்.
கொரோனாப் பேரிடர் காலத்தில் ஏற்பட்ட தொழில் இழப்பைத் தொடர்ந்து தற்போது நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி பொருளாதாரரீதியாக ஏற்கனவே நலிவுற்ற குடும்பங்களை வெகுவாகப் பாதித்துள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் கொரானாப் பேரிடர்க்காலத்தில் ஆரம்பித்த ‘அற்றார் அழி பசி தீர்த்தல்’ திட்டத்தைக் கைவிடாது தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.