மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைகள் மீதான சிங்கள குடியேற்ற ஆக்கிரமிப்பையும், தொடர்ந்து இடம்பெறும் கால்நடைகளின் உயிர் கொலைகளை கண்டித்தும் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மட்டக்களப்புக்கு சென்ற எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (05.11.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
50 ஆவது நாளாக தொடரும் பண்ணையாளர்களின் போராட்ட களத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுடன் கிழக்குப் பல்கலைக்க மாணவர்களும் ஒன்றிணைந்து இந்தப் ஆதரவுப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டம் முடிந்து யாழ்ப்பாணத்துக்கு வரும் வீதியில், பல்கலைக்கழக மாணவர்களின் பேருந்தை மறித்த பொலிசார், மாணவர்களின் விபரங்களை கோரி அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். பின்னர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி 6 மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச்சென்றுள்ளனர்.
ஜனாநாயக ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட பொலிசாரின் இந்த அத்துமீறல் செயற்பாட்டை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழர்கள் மீது இனவாதத்தை கக்கும் பிக்குவின் செயற்பாடுகளுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வராத பொலிசார், பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த மாணவர்கள் மீது வன்மத்தை காட்டியுள்ளனர்.
தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாதத்தை எதிர்க்கும் இளம் சமுதாயத்தை பயமுறுத்தி அடக்கி ஒடுக்கும் செயற்பாடாகவே நாம் இதைப்பார்க்கிறோம்.
கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்பதுடன் ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு தடை போடும் பொலிசாரின் அராஜகத்தை மீண்டும் கண்டிக்கிறோம்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.