இடமாற்றங்களின் போது வருகின்றவர்களை வரவேற்கும் பண்பினை கொண்டு மாணவர்களை எந்த எதிர்ப்பு செயற்பாடுகளிற்கும் பயன்படுத்தாதீர்கள் – கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றங்களின் போது வருகின்றவர்களை வரவேற்கும் பண்பினை கொண்டு மாணவர்களை எந்த எதிர்ப்பு செயற்பாடுகளிற்கும் பயன்படுத்தாதீர்கள் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றுபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கத்தின் மணிவிழா நிகழ்வில் கலந்து வாழ்த்துரை வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மீள்குடியேற்றம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது நான் இந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபராக வந்திருந்தேன். அந்த காலம் மிகவும் வளம் குறைந்ததான காலம். பல்வேறான வளப்பற்றாக்குறைகளுடன் மக்கள் இருந்த அதேவேளை, மக்கள் தேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய சூழல்களும் அவ்வாறுதான் இருந்தது. 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் திகதி பாடசாலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்போது இங்கும் பாடசாலை ஆரம்பிக்கப்பட வேண்டிய நிலை காணப்பட்டது. ஓரளவு வளங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பாடசாலைகள் இயக்கப்பட வேண்டிய சூழல் காணப்பட்ட நிலையிலே, புனித திரேசா பெண்கள் கல்லுரியின் அதிபராக ஜெயந்தி தனபாலசிங்கம் கடமையாற்றிக்கொண்டிருந்தார். அந்த வேளையில், குறித்த பாடசாலையை ஆரம்பிப்பதற்கான எந்த ஆயத்தங்களும் செய்யப்படவில்லை. பாடசாலை கட்டடங்கள் புனரமைக்கப்படவில்லை. அத்துடன், அப்பகுதியில் கண்ணிவெடிகள் இருப்பதாக தகவலும் இருந்தது. தளபாடங்களும் இல்லை. இவ்வாறான சூழலில் பாடசாலையை உடனடியாக ஆரம்பிப்பது என்பது கடினமாக இருந்தது. என்னுடைய மகளையும் முதலாம் ஆண்டில் இணைத்துக்கொள்வதற்காக அழைத்து வந்திருந்தேன். இவ்வாறான நிலையில் குறித்த தினத்தில் எவ்வாறாயினும் பாடசாலையை ஆரம்பிக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு அன்று பாசைாலையை அதிபர் ஆரம்பித்தார். பிள்ளைகள் தரப்பால் விரிக்கப்பட்ட நிலத்திலிருந்தே கல்வி கற்றார்கள். பாடசாலையை உத்வேகத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று செயற்பட்டதை நான் அவதானித்தேன். அந்த நேரத்தில் அவர் மீது மிகப்பெரிதான மதிப்பு காணப்பட்டது. அன்று அதனை சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். மகளீர் கல்லூரியில் இணையும் மகளீரை நடத்துவது மிகவும் கடினமானது. அவ்வேலையை அவர் சிறப்பாக செய்து வெற்றி பெற்றிருந்தார். கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு அவர் பணியினை பொறுப்பெடுத்தபொழுது இடம்பெற்ற சம்பவங்கள் மிக கவலையாக இருந்தாலும், ஆரம்பமல்ல முடிவே பிரதானம் என்பதை உணர்த்திவிட்டு செல்கின்றார் என்பதே எமக்கு கற்று தந்த விடயம். அந்த வகையில் இந்த பாடசாலை சமூகத்திடம் நாங்கள் கேட்டுக்கொள்வது, அரச சேவையில் இடமாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. அந்த இடத்திற்கு அவர்கள் செல்லத்தான் வேண்டும். அவ்வாறு இடமாற்றம் பெற்று செல்கின்றபோது அவர்களை வரவேற்க வேண்டியது பாடசாலை சமூகத்தின் பண்பு. அவ்வாறு இல்லாத போது, அவருக்கு எதிராக செயற்பட்ட நீங்கள் குற்ற உணர்வோடு இருக்க வேண்டிய நிலைமை உருவாக்கப்படுகின்றது. அந்த வகையில் வருகின்றவர்களை வரவேற்போம். அவர்களின் செயற்பாடுகளை அவதானித்து, அவர்களின் செயற்பாடுகளை பார்த்த பின்னர் விமர்சிக்க முடியும். இதனை நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். பாடசாலை மாணவர்களை எந்தக்காரணம் கொண்டும் பயன்படுத்தாதீர்கள் என உங்களிடம் அன்பாக கேட்டுக்கொள்கின்றேன். பெண் என்ற வகையில் இன்னுமரு விடயத்தினையும் நான் கூறிக்கொள்கின்றேன். ஆண் பெண் இருபாலாரும் பல்வேறு பதவிகளை வகிக்கின்றோம். ஒரு நிர்ப்பந்திக்கப்படுகின்ற பதவியை ஒரு பெண் நிர்வகிக்கின்ற பொழுது அவருக்கு பல பிரச்சினைகள் இருக்கின்றன. குறிப்பாக, ஒரு நிர்வாகத்தில் இருக்கும்பொழுது பெண் என்பதே பிரச்சியை ஆகின்றது. பெண் இதனை எவ்வாறு செய்வார் என்ற சிந்தனை சமூகத்தில் காணப்படுகின்றது. பெண்ணொருவர் நிர்வாகத்தினை முன்னெடுத்து செல்கின்ற பொறுப்பில் இருக்கின்ற பொழுது, இரட்டை சுமை அவர்களிடம் காணப்படும். பெண் செய்வாரா என்ற கேள்வியோடு சமூகம் எதிர்நோக்கிக்கொண்டிருக்கும் பொழுது, மிகவும் அவதானமாக ஒவ்வொரு விடயங்களையும் முன்னெடுத்து செல்ல வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. ஆண்களிடம் சிலவேளைகளில் அது இல்லாது இருக்கலாம். அந்த வகையில் ஜெயந்தி தனபாலசிங்கம் உண்மையில் இரும்பு பெண்மணி என்று சொல்லிக்கொள்ளலாம். அந்த வகையில் அவர் தனக்கு கொடுக்கப்பட்ட செயற்பாட்டை மிகவும் சிறப்பாக செய்துள்ளார். இந்த பாடசாலையில் அதிபராக இருக்கின்ற பொழுது கொவிட் காலப்பகுதியிலும் அவர் மிகவும் சிறப்பாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலே செயற்படடிருக்கின்றார். அதன் காரணமாகதான் இந்த பாடசாலையிலிருந்து பல வைத்தியர்களும், பொறியியலாளர்களும் ஏனைய துறைகளிற்கும் கல்வியலாளர்களை உருவாக்கியிருக்கின்றார் என்று கூறிக்கொள்ள முடியும். அவரினது செயற்பாடுகளிற்காக வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். எந்த விடயத்திலும் அஞ்சாது எடுத்த விடயத்திலிருந்து தளராது செயற்பாடுகளை முன்னெடுத்த சிங்கப்பெண்தான் அவர். அந்த சிங்கப்பெண்ணை வாழத்துவதில் பெருமை அடைகின்றேன். அது மாத்திரமின்றி, அவருக்கு துணையாக இருந்து தட்டிக்கொடுத்த அவரது கணவரையும் பாராட்டுகின்றேன். எத்தனை இடர்கள், பிரச்சினைகள் எழுகின்ற சந்தர்ப்பங்களில், எமது பிரச்சினைகளை கொட்டி தீர்க்க கூடியவர் கணவர்தான். அவ்வாறு தான் சந்தித்த அத்தனை பிர்சினைகளையும் கணவரோடு பகிர்ந்த பொழுது அவருக்கு பக்க பலமாக நின்று செயற்பட்ட அவரது கணவரையும் பாராட்டுகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.