இலங்கைக்கு மாலைதீவு வழங்கிய ஆதரவு: நேரில் சென்று நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையின் தற்போதைய விவகாரங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து படிப்படியாக மீண்டு வரும் செயல்முறை குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க, மாலைதீவின் புதிய அதிபர் முகமது முய்சுவுக்கு விளக்கியுள்ளார்.

மாலைதீவு அதிபர் செயலகத்தில் முகமது முய்சுவுடன் நேற்று மாலை இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த விடயம் தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாலைதீவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் மாலைதீவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது, மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட் ரணில் விக்ரமசிங்கவை வரவேற்றுள்ளார்.இந்த நிலையில், நேற்று மாலை அதிபர் மொஹமட் முய்சுவை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், இலங்கைக்கு மாலைதீவு வழங்கிய ஆதரவுகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்தும் இருவருக்கிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமது நிர்வாகத்தின் கீழ் பல இருதரப்பு உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒத்துழைத்தமைக்காக ரணில் விக்ரமசிங்கவுக்கு மாலைதீவு அதிபர் நன்றி தெரிவித்தார்.

இதேவேளை, ரணிலின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவை மாலைதீவு முதல் பெண்மணி ஃபஸ்னா அஹமட் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews