இலங்கை அரசியல் வரலாறு முழுவதும் உயர்வர்க்கத்தின் நலனுக்கானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உயர்வர்க்கம் என்பது முழுமைப்படுத்தப்பட்ட முதலாளித்துவத்தையோ தராண்மைவாதத்தையோ கொண்டிருக்காத அரைகுறைவாதங்களால் கட்டமைக்கப்பட்ட உயர்வர்க்கமாகவே உள்ளது. உயர்வர்க்கத்தின் உள்நாட்டுக் கொள்கையும் வெளியுறவுக் கொள்கையும் உயர்வர்க்கத்தின் ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்கவைக்கும் உபாயமாகவே அமைந்துள்ளது. அத்தகைய நோக்கத்தை நிறைவு செய்யும் விதத்தில் இனவாத உணர்வுகளை தூண்டுவதும் அதற்கு சார்பாகவும் எதிராகவும் அறிக்கைகளை இடுவதும் மீளவும் இனவாத உணர்வை பிரதிபலிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதும் வழமையான அரசியலாக கொண்டுள்ளனர். தற்போதைய ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹதாவும் அத்தகைய செயல்பாட்டையே அண்மைக்காலத்தில் அதிகம் வெளிப்படுத்தி வருகின்றார். வரவு செலவுத்திட்டம் உட்பட அனைத்து நகர்வுகளிலும் தேர்தலை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. இக்கட்டுரையும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையிலும் அத்தகைய நகர்வினை ஜனாதிபதி மேற்கொள்கின்றார் என்பதை தேடுவதாக அமையவுள்ளது.
இலங்கைக்கு 2024ஆம் ஆண்டு எந்தவொரு வெளிநாட்டுக் கப்பலும் ஆராய்ச்சி மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக இலங்கைக்குள் வருவதற்கு அனுமதிக்க வேண்டாம் என ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆராய்ச்சிக்காக உள்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் அவை அனைத்தும் இரத்து செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 2024 பெப்ரவரி மாதம் Xiang Yang Hong-3 ஆய்வுக் கப்பலை அனுப்புவதற்கு சீனா அனுமதி கோரிய போதே அரசாங்கம் மேற்படி முடிபை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. சீனா தொடர்ச்சியாக ஆய்வுகளை இலங்கைத் தீவை மையப்படுத்தி நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாகவே தெரிகிறது. இலங்கைத் தீவு இந்துசமுத்திரத்தின் மத்தியில் அமைந்திருப்பதும் இந்தியாவுக்கு அண்மையிலிருப்பதும் மட்டும் சீனாவின் நடவடிக்கைக்கு காரணமாக கொள்ள முடியாது. அதனையும் கடந்து இந்துசமுத்திரத்திலும் இலங்கையின் 1340 கிலோமீட்டர் சுற்றளவைக் கொண்ட கரையோரங்களிலும் குவிந்துள்ள வளங்கள் சார்ந்த ஆய்வையே இலக்காக கொண்டுள்ளதாக தெரிகிறது. இலங்கையின் கரையோரங்களில் தனித்துவமான கணிமங்கள் காணப்படுவதாக முன்னய ஆய்வுகள் அடையாளங் கண்டுள்ளன. அதனடிப்படையில் 12 கடல் மைல் (Territorial Sea) பகுதி ஏறக்குறைய 22.2 கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டதாக உள்ளது. அடுத்துரு வலயம் (Contiguous Zone) என அழைக்கப்படும் 24 கடல்மைல் பகுதியானது 445.4 கிலோமீட்டர் பரப்பளவையும் 200 கடல்மைல் (Special Economical Zone) எனும் விசேட பொருளாதார வலையமானது 370.4 கிலோமீட்டர் பரப்பளவையும் கொண்டதாக அமைந்துள்ளது. இப்பகுதியை இலக்கு வைத்தே சீனாவின் ஆய்வுகள் காணப்பட்டாலும் நடைமுறையில் இந்துசமுத்திரமானது சீனாவின் கடல் அரதிகாரத்தை அடைவதற்கான அடிப்படையாக உள்ளது. அதனை நோக்கமாகக் கொண்டு சீனா செயல்படுவதென்பது இலங்கைத் தீவின் கடல் பரப்பினதும் அதன் வளங்களதும் அளவினை ஒப்பிடும் போது தெரிந்து கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது. இத்தகைய முயற்சிக்கான நகர்வை சீனா முன்னெடுக்கும் போது இலங்கையின் ஜனாதிபதி சீனாவின் கப்பல்களுக்கான அனுமதி மட்டுமல்லாது அனைத்து கப்பல்களது அனுமதியையும் இரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார் என்பது கவனிக்கத் தக்கதாகும். ஜனாதிபதி பொருளாதார இராணுவ அரசியல் உறவில் நெருக்கமாக இயங்கும் சீனாவை ஏன் தடுத்த நிறுத்தியுள்ளார் என்பது இயல்பான சந்தேகமாகும். அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.
முதலாவது, ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவின் அதிகார நலனுக்கான உபாயமாகவே தென்படுகிறது. ஜனாதிபதி 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நகர்த்துவதில் முனைப்புக் கொண்டு இயங்குகிறார். வரவு செலவுத் திட்டத்தை பற்றிய உரையாடலை வெளிப்படுத்துகின்ற போது இரண்டு பிரதான விடயங்களில் கவனம் செலுத்தியிருந்தார். ஒன்று, இலங்கையிலுள்ள பௌத்தமதத்தையும் அதன் ஆதிக்கத்தையும் பாதுகாக்கும் விதத்தில் அதிக சலுகைகளையும் வாய்ப்புக்களையும் முதன்மைப்படுத்தியிருந்தார். இலங்கையிலுள்ள பௌத்த வாக்குகளை இலக்காகக் கொண்டு நகர்வதனைக் கண்டு கொள்ள முடிந்தது. இரண்டு, மத்தியதர வர்க்கத்தை பாதுகாக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் சலுகைகளை முன்மொழிந்திருந்தார். இவை இரண்டுமே வாக்காளரை இலக்கு வைத்ததாகவே உள்ளது. இதனூடாக 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதாகவே தெரிகிறது.
இரண்டாவது, சீனாவின் கப்பல்களது வருகையை தடுப்பது என்பது முழுமையாக பிராந்திய நாடான இந்தியாவுடனான நட்பினைப் பேணுவதற்கானதாகவே தெரிகிறது. ஹம்பாந்தோட்டை சீனாவுக்கு உரியதாக இருப்பது மட்டுமல்லாது திருகோணமலை நோக்கிய இந்தியாவின் இலக்கினை தேர்தல் முடிவடையும் வரை கையாள ஜனாதிபதி திட்டமிடுவதையே அவரது உத்தரவு உறுதிப்படுத்துகிறது. காரணம் கடந்த காலங்களில் இலங்கைத் தீவின் அரசியலில் இந்தியாவின் நடவடிக்கைகளை விளங்கிக் கொண்ட ஜனாதிபதி அதற்கு அமைவாக நகர திட்டமிடுகிறார். குறிப்பாக பாராளுமன்றத்தால் ரணில் விக்கிரமசிங்ஹா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறை இந்தியா சார்ந்து குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. அவ்வாறே ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஓராண்டு முடிபடைந்த நிலையிலேயே இந்தியாவுக்கு அரசமுறைப் பயணத்தை மேற்கொள்ள முடிந்தது. இதனால் இந்தியா பொறுத்து அதிக கரிசனை கொள்ள வேண்டியவராக ஜனாதிபதி விளங்குகிறார்.
மூன்றாவது, இந்தியா ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்ஹாவுக்கு முரணான முடிபுகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது. இலங்கையின் வெளியுறவு ஜனாதிபதி தேர்தலுக்கான முடிபுகளை எடுக்க முனைகிறது. இதில் இரண்டம்சங்கள் தனித்துவமானதாக தெரிகிறது. ஒன்று, ஆட்சியாளர்கள் தமது நலனுக்காக உள்நாட்டை மட்டுமல்ல வெளிநாடுகளையும் கையாளும் போக்கினைப் புலப்படுகிறது. இரண்டு, இதன் மூலம் இலங்கையின் வெளியுறவானது ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் அமைவானது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு நாட்டினையும் அதன் வளங்களையும் பிரயோகிக்கு தாராளவாதிகளைக் கொண்டதாகவே இலங்கையின் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய மட்டத்திலும் காணப்படும் குறைபாடாகவே உள்ளது. ஆனால் இலங்கைத் தீவானது அத்தகைய நகர்வுகளை அதீதமாகவும் நலன்சார்ந்து முழுமையாகவும் பயன்படுத்துவதனைக் கண்டு கொள்ள முடிகிறது.
நான்காவது, ஜனாதிபதியின் உத்தரவு தனித்து 2024 ஆம் ஆண்டை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளதே அன்றி எதிர்கால இங்கைக்கான உத்தரவாக அமையவில்லை. இலங்கையின் வளங்களை பாதுகாப்பதுடன் பிராந்திய அரசான இந்தியாவை முரண்பட்டுக் கொள்வதை தவிர்ப்பது என்ற நீண்டகால நோக்கில் கட்டமைக்கப்படவில்லை. தற்காலிகமாக இந்தியாவுடன் முரண்படுவதைத் தவிர்ப்பதாகவே உள்ளது. அத்தகைய விலக்கானது ஜனாதிபதி தேர்தலுக்கு இந்தியாவால் ஏற்படக் கூடிய நெருக்கடியை கையாளுவதே பிரதான நோக்கமாகத் தெரிகிறது. இதனால் சீனாவுடனான நெருக்கமான உறவு முடிபுக்கு வந்துவிடும் எனக் கருதுவது பலவீனமான உரையாடலாகவே அமையும். இந்தியாவின் இராஜீக ரீதியான அழுத்தங்களும் நடவடிக்கைகளை எதனையும் கருத்தில் கொள்ளாது இயங்கும் இலங்கை அரசியல் தீடீரென சீனக்கப்பல்களை தடுத்து நிறுத்துவதென்பது போலியான உத்தரவு என்பதை புரியகூடியதாக உள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான அரசியலைப் பொறுத்ததாகவே இத்தகைய நகர்வை புரிந்து கொள்ள வேண்டும். அது முழுமையாக சீன-இலங்கை நெருக்கமானதாகவும் இந்தியாவை கையாளுவதாகவும் மேற்குடன் இணைந்து கொள்வதாகவுமே அமையும். இந்தியா முரண்படும் போது மேற்கையும் மேற்கு முரண்படும் போது இந்தியாவுடனும் நட்புக் கொள்ளும் அதே வேளை முழுமையாக சீனா பக்கம் உள்ள அரசாக இலங்கைத் தீவு காணப்படும்.
எனவே ஜனாதிபதியின் வெளியுறவு அமைச்சுக்கு முன்வைத்த உத்தரவு 2024 ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டதாகும். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டத்திற்கு எந்தவிதமான எதிர்வினையும் சர்வதேச நாணயநிதியம் முன்வைக்கவில்லை என்பதையும் புரிந்து கொள்வது அவசியமானது. அப்படியானால் சீனாவினதும் மேற்குலகத்தினதும் முழுமையான ஒத்துழைப்புக்களுடன் ஒரு தேர்தல் நிகழ திட்டமிடப்படுகிறது. அதற்காக இத்தேர்தல் ஜனநாயகத்திற்கானது என கருதிவிட முடியாது. அது ரணில்விக்கிரமசிங்ஹாவுக்கானது. அத்தகைய தேர்தலில் ரணில்விக்கிரமசிங்ஹா ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதனை இந்தியா அங்கீகரிக்கவே ஜனாதிபதியின் உத்தரவு வெளியாகியுள்ளது. அத்தகைய உத்தரவின் அரசியலும் அதுவாகவே உள்ளது.