யாழ் பல்கலைக்கழகம் சிங்கள மயமாக்கப்படுகின்றதா? அரசியல் ஆய்வாளர் சடடதரணி சி.அ.யோதிலிங்கம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டபீடத்தில் தமிழ் மொழி மூலக்கற்கை நெறியையும் ஆரம்பிக்க வேண்டும் என்ற குரல் இன்று மேலெழத்தொடங்கியுள்ளது. சட்டபீட மாணவர்களே இந்த விவகாரத்தை வெளி உலகிற்குக் கொண்டுவந்துள்ளனர். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் வரத்தொடங்கியுள்ளன. விரிவுரையாளர் இளம்பிறையன் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் தமிழ் மக்களுக்கான பண்பாட்டுப்பல்கலைக்கழகமாக இருப்பதால் தமிழ் மொழி மூலக்கற்கையை ஆரம்பிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார். ஆய்வாளர் நிலாந்தன் ஒருபண்பாட்டுப் பல்கலைக்கழகம் என்ற நிலை பலவீனமாகி வருகின்றது என கவலையை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு மைய தமிழ் ஆர்வலர்கள் ஆங்கிலமொழிக் கற்கையே தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருகின்றனர். தொழில் தேர்ச்சிக்கு ஆங்கில மொழிக்கல்வியே உகந்ததாக இருக்கும் என்பது அவர்களது கருத்தாக உள்ளது. சட்டபீடத்தை பொறுத்தவரை தமிழ் மொழிகள் கற்கைத்துறையை அறிமுகப்படுத்துவதில் பெரிய அக்கறையைக் காட்டவில்லை. அதனை ஆரம்பித்தால் சிங்களமொழிக்கற்கையையும் ஆரம்பிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வரும் என்பது அவர்களது வாதமாக உள்ளது. இங்கு கற்கை மொழி என்ற விடயம் இதற்குப் பின்னால் உள்ள அரசியலினாலேயே முக்கியத்துவம் பெறுகின்றது.

2009ம் ஆண்டு ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதைத் தொடர்ந்து இனியொருதடவை தமிழ் மக்கள் மத்தியிலிருந்து போராட்ட எழுச்சி வரக்கூடாது என்பதில் இலங்கை அரசு மிகக் கவனமாக உள்ளது. எனவே மீள்எழுச்சி வராத வகையில் சிங்களமயமாக்கல் வேலைத்திட்டத்தை தமிழர் தாயகத்தில் அது நகர்த்தி வருகின்றது. இதற்கு பல்கலைக்கழகங்களையும்; ஒரு கருவியாகப்பயன்படுத்துகின்றது. இதைவிட விகாரை மூலமும் பொருளாதார ஆக்கிரமிப்பு மூலமும் சிங்கள மயமாக்கல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கை அரசு மட்டுமல்ல இந்திய அரசு , மேற்குலகம் என்பனவும் மீள்எழுச்சி வரக்கூடாது என்பதில் கவனமாக உள்ளன.

இந்தியா 13 வது திருத்தத்திற்கு மேல் தமிழ் அரசியல் செல்லக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது. மேற்குலகம் அடையாள அரசியலுக்கு மேல் செல்லக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது. மூன்று தரப்பும் தமிழ் மக்களின் இறைமை அரசியலை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. இதனால் தமிழ் அரசியலை தரக்குறைப்பு  செய்ய வேண்டும் என்பதில் இம்மூன்று தரப்புக்கும் இடையே ஒரு ஒருங்கிணைப்பு இருக்கின்றது எனலாம். சுவஸ்திகா விவகாரம் கூட இறைமை அரசியலை நீர்த்துப்போக செய்து அடையாள அரசியலை மேலே கொண்டு வரும் ஒரு முயற்சியே!

இலங்கை அரசு யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை இரண்டு நகர்வுகளில் கவனமாக இருக்கின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தை பலவீனமாக்கல், யாழ் பல்கலைக்கழகம் தமிழ் அரசியலின் முக்கிய மையமாக இருப்பதை தடுத்தல் என்பனவே இந்த இரண்டுமாகும்.
யாழ்ப்பாண மாவட்டம் விரும்பியோ, விரும்பாமலோ தமிழ் அரசியலின் மையமாக உள்ளது. முக்கியமான அரசியல் தீர்மானங்கள் , முக்கியமான போராட்டங்கள் பற்றிய தீர்மானங்கள் யாழ்ப்பாணத்திலிருந்தே எடுக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் தற்போது உலகம் முழுக்க பரந்து இருப்பதனால் யாழ்ப்பாணத்தில் இடம் பெறுகின்ற ஒவ்வவொரு விடயமும் உடனடியாகவே சர்வதேச மட்டத்தில் பேசு பொருளாகி விடுகின்றது.
இம் மாவட்டத்தில் 90 வீதத்திற்கு மேல் தமிழர்கள் வசிப்பதும் மாவட்டத்தை முக்கிய நிலையில் வைத்திருக்கின்றது. மொத்தத்தில் தமிழ்த்தேசிய அரசியலின் குவி மையம்  யாழ்ப்பாணம் எனலாம். யாழ்ப்பாணத்தின் இந்த முதன்மை நிலை அரசின் நிகழ்ச்சி நிரலை நகர்த்துவதில் தடங்கல்களை கொண்டு வருகின்றது எனலாம். இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலை மட்டுமல்ல இந்திய அரசின் நிகழ்ச்சி நிரல், மேற்குலகின் நிகழ்ச்சி நிரல் என்பனவும் யாழ்ப்பாணத்திற்கு வரும் போது நகர முடியாமல் பலவீனமாகி விடுகின்றது. தமிழ் அரசியல் தொடர்பாக இந்தியா நகர்த்தியிருந்த அனைத்து நிகழ்ச்;சி நிரல்களும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. மேற்குலகம் அரசு சாரா அமைப்புக்கள் மூலம் நகர்த்த முயன்ற நிகழ்ச்சி நிரலும் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றது. யாழ்ப்பாணத்தின் அதீத விழிப்பு நிலையே இதற்கு காரணமாகும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை சிங்கள மயமாக்குவதற்கு அது எடுத்துக் கொண்ட கருவியே ஆங்கில மொழி வழி கற்கை துறையாகும். முன்னர் விஞ்ஞான பீடம், மருத்துவ பீடம் என்பன மட்டுமே ஆங்கில மொழி கற்கை துறைகளாக இருந்தன. வணிகபீடம், முகாமைத்துவ பீடம் என்பவற்றில் தமிழ் மொழி கற்கை துறையே நடைமுறையில் இருந்தது. விரைவிலேயே முகாமைத்துவ பீடம் ஆங்கில வழி கற்கைக்கு மாற்றப்பட்டதோடல்லாமல் புதிதாக உருவாக்கப்பட்ட சட்ட பீடமும் ஆங்கில வழி கற்கை துறையாக மாறியது. இவற்றை விட விவசாய பீடம், பொறியியல் பீடம் என்பனவும் ஆங்கில வழி கற்கை துறைகளாக மாறின.
இங்கு ஆங்கில வழி கற்கை துறை என்ற பெயரில் வகை தொகை இல்லாமல் சிங்கள மாணவர்கள் கலைப்பீடம், நுண்கலைப்பீடம் அல்லாத அனைத்து பீடங்களுக்கும் உள்வாங்கப்பட்டனர். இவ்வாறு உள்வாங்கப்படும் போது இது ஒரு பண்பாட்டுப்பல்கலைக்கழகம் என்ற விடயம் சிறிது கூட கவனத்தில் எடுக்கப்படவில்லை.
ருகுணு பல்கலைக்கழகத்தில் ஒரு பீடத்திலாவது தமிழ் மாணவர்களின் பெரும்பான்மையை அங்கீகரிப்பார்களா? அங்கு ஒரு நியாயம். இங்கு ஒரு நியாயமா? பாடசாலைகளில் மாணவர்களை அனுமதிக்கும் போது கூட மதம் சார்ந்தும் இனம் சார்ந்தும் பண்பாட்டு விடயங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஒரு கிறிஸ்தவ மத பாடசாலையில் கிறிஸ்தவ மாணவர்களின் பெரும்பான்மைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. பௌத்த மத பாடசாலைகளில் பௌத்த மத மாணவர்களுக்கே பெரும்பான்மை வழங்கப்படுகின்றது.
தென்னிலங்கையில் பல்லின பாடசாலைகள் காணப்படுகின்றன. எனினும் சிங்களப் பெரும்பான்மைக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. கொட்டாஞ்சேனை பிரதேசம் தமிழ் மக்களை அதுவும் தமிழ் கத்தோலிக்கர்களை பெரும்பான்மையாக கொண்ட பிரதேசம் எனினும் அங்குள்ள நல்லாயன் கன்னியர் மட பாடசாலையில் சிங்கள மாணவர்களுக்கே பெரும்பான்மை வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு வகுப்பிலும் நான்கு பிரிவுகள் சிங்கள மாணவர்களுக்கு வழங்கப்பட்டால் ஒரு பிரிவு மட்டும் தமிழ் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இதன் சகோதர பாடசாலையான புனித பெனடிக் கல்லூரியிலும் இதே நிலை தான். இவ்வளவிற்கும் சிங்கள மாணவர்கள் வத்தளை, ஜாஎல போன்ற தூர இடங்களிலிருந்து வருகின்றனர். தமிழ் மாணவர்கள் அருகில் இருந்தே வருகின்றனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலைப்பீடம் அல்லாத அனைத்து பீடங்களிலும் சிங்கள மாணவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். இப்பெரும்பான்மை கூட சிறிய பெரும்பான்மை அல்ல. ¾  பெரும்பான்மை அல்லது 2ஃ3  பெரும்பான்மை , 50 :50  இருந்தாலாவது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் அனேகமான பீடங்கள் 75 :25 என்ற வீதமே உள்ளது. சட்ட பீடத்தில் அது 80 :20    என்ற வகையில் உள்ளது இது திட்டமிட்ட ஒரு சிங்கள மயமாக்கல் செயற்பாடே! இதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களுக்குள்ளது. இதனை தடுத்து நிறுத்தாவிட்டால்; ஒரு பண்பாட்டுப்; பல்கலைக்கழகம் என்ற தகைமையை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் பெற்றுவிட முடியாது. இது ஒருவகையில் இன அழிப்பே. பண்பாட்டு மையங்களை அழிப்பதும் இன அழிப்பே ஆகும்.தமிழ்த்தேசிய அரசியலின் முக்கிய மையமாக இருப்பதை அழிப்பதும் அதன் ஒரு இலக்காகும்.

இதை விட சட்டக்கல்வியை தமிழ் வழியில் யாழ்ப்பாணத்தில் படிக்க விரும்பும் மாணவர்கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தமிழ் மொழியில் படிக்க வேண்டும் என்றால் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தான் செல்ல வேண்டும். கொழும்பில் கற்பது என்பது ஏழைக்குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்கு இலகுவான ஒன்றல்ல. இதற்காகவே சட்டப்படிப்பை நிறுத்தி கலைப்பீடத்திற்கு சென்ற மாணவர்களும் உண்டு. தனது சொந்த பிரதேச பல்கலைக்கழகத்தில் சட்டப்பீடம் இருந்தும் தனது தாய் மொழியில் அங்கு கற்க முடியாமை தமிழ் மாணவர்களைப் பொறுத்த வரை துரதிஸ்டவசமானதே! ஒரு பண்பாட்டு பல்கலைக்கழகத்தில் தாய் மொழியில் கற்க முடியாவிட்டால் வேறு எங்கு கற்பது? என்ற கேள்வியும் எழுகின்றது.
இதை விட இன்னோர் விடயம் தமிழ் மொழியில் கற்கும் போது உச்ச நிலையில் கற்கக் கூடிய வாய்ப்பு உண்டு. விரிவுரையாளர்களும் உச்ச நிலையில் கற்பிக்கலாம். யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட பீட தலைவராக இருந்த குருபரன் ஒரு தடவை கூறினார் “தமிழில் கற்பிப்பதென்றால் உச்ச நிலையில் மாணவர்களுக்கு கற்பிக்க முடியும.; ஆங்கில மொழியில் கற்பிக்கும் போது மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கீழிறங்கி கற்பிக்க வேண்டிய நிலை உள்ளது”

இங்கு தமிழ் வழிக்கற்கை தொடர்பாக இரண்டு எதிர்கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று தமிழ் வழியில் கற்று சட்டத்தரணிகளானவர்கள் மொழி பற்றாக்குறை காரணமாக உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் என்பவற்றில் தமது தொழிலை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் என்ற கருத்தாகும். இதில் உண்மைகள் இல்லை என கூற முடியாது. இதற்கு மாற்று வழி சமாந்தரமாக ஆங்கில மொழி தேர்ச்சியை பெறுவதற்கான சூழலை உருவாக்குவதே! வெளிநாடுகளில் தொழில் பார்க்க முடியாத நிலையும் ஏற்படும் என்ற வாதமும் இது தொடர்பாக முன்வைக்கப்படுகின்றது. முன்னர் தமிழ் வழியில் கற்ற பலர் இன்று சிறந்த சட்டத்தரணியாக உள்ளனர் என்பதை நாம் மறக்க முடியாது. வெளிநாடுகளிலும் சட்டத்தரணிகளாக அவர்கள் பணிபுரிகின்றனர். நுணுக்கமாக அவதானிப்பின் இது பலவீனமான கருத்து என்றே கூறலாம்.
இரண்டாவது கருத்து சிங்கள மொழி கற்கையும் ஆரம்பிக்கும்படி சிங்கள மாணவர்கள் கேட்பர் என்ற கருத்தாகும். இது ஏற்றுக்கொள்ள கூடிய கருத்தல்ல. சிங்கள மொழியில் கற்பதற்கு வேறுபல  பல்கலைக்கழகங்கள் உள்ளன. இங்கே ஆங்கில வழி கற்கையை நிறுத்தும் படி கேட்கவில்லை. தமிழ் வழிக்கற்கைக்கும் சந்தர்ப்பம் கொடுங்கள் என்றே கேட்கப்படுகின்றது. எனவே சிங்கள மாணவர்கள் ஆங்கில வழியில் கற்க விரும்பினால் இங்கே கற்கலாம். சிங்கள மொழியில் கற்க விரும்பினால் சிங்கள பிரதேசங்களிலுள்ள பல்கலைக்கழகங்களில் கற்கலாம் என்ற நிலையை உருவாக்குவதே பொருத்தமானது.

இங்கே இந்த விவகாரத்தில் முக்கிய விடயங்கள் சிங்கள மயமாக்கல் செயற்பாட்டை தடுத்து நிறுத்துவது, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை ஒரு பண்பாட்டு பல்கலைக்கழகமாக பேணுவது என்பவையே ஆகும். இவற்றை மேற்கொள்வதற்கு எந்தவொரு பீடத்திற்கும் 60 வீதத்திற்கு மேல் தமிழ் மாணவர்கள் இருக்க வேண்டும் என்ற நிலைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இரண்டாவது சட்ட பீடம், முகாமைத்துவ பீடம் என்பவற்றில் தமிழ் வழிக்கற்கையும் ஆரம்பிக்க வேண்டும். இதன் வழி தமிழ் வழி பயில விரும்பும் மாணவர்களுக்கு ஏற்ற வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
முதலில் இது தொடர்பான உரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும். இதன் பின்னர் தமிழ் சமூகமாக இணைந்து அழுத்தங்களை கொடுப்பது பற்றி யோசிக்கலாம்.

Recommended For You

About the Author: Editor Elukainews