06 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விசா வழங்கும் திட்டம்!

ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா கைத்தொழிலை கட்டியெழுப்பும் முன்னோடி நிகழ்ச்சித் திட்டமாக, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அடுத்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி இராஜதந்திர, உத்தியோகபூர்வ, பொது அலுவல்கள் மற்றும் ஆரம்ப கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கும் குறித்த நாடுகளின் பிரஜைகள் இந்தத் திட்டத்தின் கீழ் கட்டணம் இன்றி இலவசமாக விசாவைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அடுத்த வருடம் மார்ச் மாதம் 31 திகதி வரை சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரஜைகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் கட்டாயமாக இலத்திரனியல் பயண அனுமதிக்காக விண்ணப்பித்து அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
இதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சுற்றுலாப் பயணிகள் 30 நாட்கள் கட்டணம் இன்றிய இலவச விசா காலத்தை அனுபவிக்க முடியும்.
அத்துடன், இலங்கைக்கு வருகைத்தந்த முதல் நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இருமுறை நுழைவு வசதிகள் வழங்கப்படுகின்றன.
அத்துடன், இந்தத் திட்டத்தின் கீழ் இலவச இலத்திரனியல் பயண அனுமதிக்கு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews