
கொலை செய்யப்பட்ட சித்தங்கேணி இளைஞன் சித்திரவதை செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு விஞ்ஞான ரீதியிலீ ஆய்வு செய்வதற்கு யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான குழுவினர் நேற்றையதினம் சென்றிருந்தனர். இதன்போது சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் அவர்களும் கூடவே சென்றிருந்தார்.

இது குறித்து அவர் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நேற்றைய தினம் நீதிமன்றத்தின் கட்டளைக்கமைவாக வட்டுக்கோட்டைப் பொலீஸ் நிலையத்திற்குச் சென்று அலெக்ஸ் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட – தாக்கப்பட்ட – தடுத்துவைக்கப்பட்ட இடங்களைச் சாட்சி காண்பித்தார்.

சாட்சியின் பாதுகாப்பிற்காக நீதிமன்ற அனுமதியோடு நானும் சென்றிருந்தேன்.
அங்கு அவதானித்தவற்றின் அடிப்படையில் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையம் சட்ட அடிப்படையிலான காவல் நிலையமாக அன்றி ஓர்
சித்திரவதைக் கூடமாகவே செயற்பட்டு வந்துள்ளது என்பதை உணரமுடிகின்றது.




நீதிமன்ற விசாரணைகள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக ஏனைய விடயங்களை வெளிப்படுத்துவதை இவ்விடத்தில் தவிர்த்துக் கொள்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.