
அடுத்துவரும் சில மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடுமெனவும், ஏனைய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமெனவும் அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இதேவேளை, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் வலுவடைந்துள்ளது.
அது நாளைய தினம் புயலாக உருவாக வாய்ப்புள்ளதாகவும், நாளை இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இந்தியாவின் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னர், குறித்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்தியாவின் தெற்கு ஆந்திர பகுதியில் கரையை கடக்குமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.