வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த அலெக்ஸின் மரணத்திற்கு நீதி வேண்டி இன்றையதினம் வட்டுக்கோட்டை சந்தியில் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “காவல்துறையா காவாலி துறையா, சுடலையில் வைத்து தாக்காதே, அலெக்ஸ் ஒரு அப்பாவி வட்டுக்கோட்டை பொலிஸ் குற்றவாளி, அலெக்ஸிற்கு நீதி வேண்டும், வாங்காதே வாங்காதே இலஞ்சம் வாங்காதே, வாங்காதே வாங்காதே சாராயப் போத்தல் வாங்காதே, அலெக்ஸ் ஐயோ ஐயோ, செய்யாதே செய்யாதே சித்திரவதை செய்யாதே” என கோஷமிட்டு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது ஊர்காவற்துறை பொலிஸ் உப பரிசோதகர் சுஜீவ லித்தமாகொட அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு, கையில் ஒரு கடிதத்துடன் வருகைதந்தார். இதன்போது போராட்டக்காரர்களுடன் அவர் பேசுவதற்கு முயற்சித்தவேளை அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்போது அவர் அவ்விடத்தில் இருந்து அகன்றார்.
பின்னர் அவர் போராட்டத்தின் முடிவில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்ததுடன், ஊடகவியலாளர்களின் ஒரு சில கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு இறுதியில் பதிலளிக்க முடியாமல் அங்கிருந்து அகன்று சென்றார்.
இந்த போராட்டத்தில் அலிக்ஸின் உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.