
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பதை தெரிவு செய்வதற்கு வரும் ஜனவரி மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி அது. அக்கட்சித் தலைவரை இதுவரை காலமும் தேர்தல் இன்றி ஏகமனதாக தெரிவு செய்து வந்தார்கள்.அதாவது போட்டிக்கு ஆள் இருக்கவில்லை. ஆனால் இம்முறை போட்டி ஏற்பட்டிருக்கிறது. இப்போட்டிக்குக் காரணம் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அந்த பதவியை அடைய விரும்புவதுதான்.
கடந்த 14 ஆண்டுகளாக தமிழரசுக் கட்சியின் பட்டத்து இளவரசர் போல சுமந்திரனே தோன்றினார். அதை நோக்கி அவர் தன்னை வளர்த்துக் கொண்டார். உள்ளூராட்சி சபை, மாகாண சபை போன்ற எல்லா மட்டங்களிலும் அவர் தன்னுடைய ஆதரவுத் தளத்தைப் பெருக்கிக் கொண்டார்.அதற்கு முது தலைவராக இருந்த சம்பந்தரின் ஆசிர்வாதமும் இருந்தது. அதாவது பல ஆண்டுகளாகத் தலைமைப் பதவியை இலக்கு வைத்து திட்டமிட்டு உழைத்தவர் சுமந்திரன்.
அவரிடமிருந்த மொழிப்புலமை,சட்டப் புலமை,நிதிப்பலம் போன்றவை காரணமாக அவர் திட்டமிட்டுத் தன்னுடைய நிலையை பலப்படுத்தி வந்தார்.சிறீதரன் அவருக்கு சவாலாக எழாதவரை அவர்தான் ஏகமனதாக தெரிவு செய்யப்பட வேண்டிய ஒரு தலைவர்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது சிறீதரனும் அவரும் இணைந்து செயல்பட்டார்கள்.சிறீதரன் சுமந்திரனை அன்ரன் பாலசிங்கம் என்றும் அழைத்தார்.அது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
கட்சிக்குள் சுமந்திரனின் எழுச்சி என்பது கடந்த 14 ஆண்டுகளிலும் படிப்படியாக திட்டமிட்டு கட்டியெழுப்பப்பட்ட ஒன்று.சம்பந்தர் அதைத் தொடங்கி வைத்தார்.கட்சியை தீவிரவாத நீக்கம் செய்யவேண்டும், சிங்கள மக்களின் நன்மதிப்பை வென்றெடுக்க வேண்டும் என்றெல்லாம் சிந்தித்து சம்பந்தர் உள்ளே கொண்டு வந்தவர்தான் சுமந்திரன். ஆயுதப் போராட்டமானது சிங்கள மக்களைப் பகை நிலைக்குத் தள்ளி விட்டது என்று சம்பந்தர் கருதினார்.ஒரு தீர்வை பெறுவதாக இருந்தால் சிங்கள மக்களின் ஒப்புதல் அவசியம் என்றும் அவர் நம்பினார்.எனவே சிங்கள மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கு கொழும்பை மையமாகக் கொண்ட மொழியாளுமை கொண்ட சுமந்திரனைப் போன்றவர்கள் விக்னேஸ்வரனைப் போன்றவர்கள் அவசியம் என்றும் அவர் நம்பினார்.எனவே சுமந்திரன்,விக்னேஸ்வரன் போன்றவர்களை சம்பந்தர் கட்சிக்குள் இறக்கியமை என்பது தற்செயலானது அல்ல.அவரிடம் அதற்கென்று தெளிவான ஒரு வழிவரைபடம் இருந்தது. அதன்படியே காரியங்கள் முன்னெடுக்கப்பட்டன.அதனால்தான் சுமந்திரன் பட்டத்து இளவரசராக மேல் எழுந்தார்.
ஆனால் சம்பந்தரின் வழி தோற்றுவிட்டது.அவர் எதிர்பார்த்ததுபோல ஒரு தீர்வைப் பெற முடியவில்லை.அதுமட்டுமல்ல,அவர் உள்ளே இறக்கிய விக்னேஸ்வரன் அவருக்கு எதிராகத் திரும்பினார்.அதன்பின் இறக்கப்பட்ட குகதாசன் எதிராகத் திரும்பி விட்டார். சுமந்திரன் சாணக்கியர் கூறியது போல “நண்டாக” மாறிவிட்டார். “இளவரசர்கள் நண்டுகளைப் போன்றவர்கள்.அவர்கள் தகப்பனைத் தின்னிகள்” என்று சாணக்கியர் கூறுவார்.மொத்தத்தில் சம்பந்தர் ஒரு தோல்வியுற்ற தலைவராக ஓய்வு பெறப் போகின்றாரா?.
ஆனால் அவர் தமிழ் அரசியலைச் சீரழித்து விட்டார்.கடந்த 14 ஆண்டுகளில் அவரால் உருப்படியான ஒரு தீர்வை பெற்றுத்தர முடியவில்லை. கூட்டமைப்பு என்ற ஐக்கிய கட்டமைப்பையும் பாதுகாக்க முடியவில்லை.அவருடைய வாரிசுகளே அவரைத் தூக்கி எறியும் ஒரு நிலை. அவர் கடந்த 14 ஆண்டுகளாக திட்டமிட்டு முன்னெடுத்த அரசியல் வழியின் விளைவாக அவருடைய சொந்தக் கட்சிக்குள்ளேயே சிதைவுகள் தொடங்கிவிட்டன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறீதரன் சுமந்திரனின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டிருந்தார்.அதனால்தான் சுமந்திரனை அன்ரன் பாலசிங்கம் என்றும் அழைத்தார்.ஆயின் இப்பொழுது சிறீதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையே ஏற்பட்டிருப்பது தனிப்பட்ட முரண்பாடா?அல்லது,கொள்கை முரண்பாடா?கூட்டமைப்புத் தேய்ந்து தமிழரசுக் கட்சியாகியதற்கு சுமந்திரனையே பலரும் குற்றஞ்சாட்டுவதுண்டு.சிறீதரனின் செல்வாக்கு அடித்தளமாக காணப்படும் கிளிநொச்சிக்குள் சுமந்திரன் தனக்கு ஆதரவான ஒரு சிறு அணியை உருவாக்கி வைத்திருக்கிறார்.ஏற்கனவே சிறீதரனோடு இருந்தவர்கள் அவர்கள்.சிறீதரனின் கோட்டைக்குள் சுமந்திரன் ஊடுருவ முற்பட்டமையும், முரண்பாடுகள் தீவிரமடைய ஒரு காரணம்.
முதலில் இருவருக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை பார்க்கலாம். சுமந்திரன் புரட்டஸ்தாந்து பாரம்பரியத்தில் வந்தவர்.கொழும்புமைய வாழ்க்கைக்கு அதிகம் பழக்கப்பட்டவர்.கொழும்புமைய உறவுகளைக் கொண்டவர்.ஒரு தமிழ் மக்களின் பிரதிநிதியாக கொழும்பில் தன் செல்வாக்கை மேலும் பலப்படுத்திக் கொண்டவர்.யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட ஓர் ஊடக முதலாளி ஒருமுறை சொன்னார் “தமிழ் மக்களின் வாக்குகளால் அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வருகிறார். அதேசமயம் தென்னிலங்கையில் அவர் அரசியல் உயர் குழாம்,படைத்துறை உயர் குழாம்,புத்திஜீவிகள், ஊடகங்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவராக வளர்ந்திருக்கிறார். தென்னிலங்கை அரசியலில் அதிகம் செல்வாக்கு மிக்க ஒரு தமிழ் அரசியல்வாதி அவர்தான்.தமிழ் மக்களின் வாக்குகளால் அவர் கொழும்பில் ஒரு பிரமுகராக வலம் வருகிறார்” என்று.
தனது மொழிப்புலமை,வாழ்க்கைப் பின்னணி காரணமாக சுமந்திரன் தென்னிலங்கையில் மட்டுமல்ல,உலக அளவில் ராஜதந்திரிகள் மத்தியிலும் ராஜதந்திர வட்டாரங்களிலும் அதிகம் தெரியவந்த ஒருவராகக் காணப்படுகிறார்.
இப்பொழுது சிறீதரனைப் பார்க்கலாம். அவருடைய வேர் தீவுகளில் இருக்கிறது. அவர் தன்னைப் பலப்படுத்திக்கொண்டது கிளிநொச்சியில்.போராட்டப் பாரம்பரியத்தில் வந்தவர்.அதிகம் உள்ளூர் பண்புடையவர்.உள்ளூர் உணர்வுகளை அதிகம் பிரதிபலிப்பவர்.தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரான ஒரு காலகட்டத்தில் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்ற அடிப்படையில் அவருடைய பாரம்பரியம் அவருடைய வாழ்க்கைமுறை போன்றன சுமந்திரனிடமிருந்து வேறுபாடானவை.
இந்த வேறுபாடுகளை சிறீதரனை ஆதரிப்பவர்கள் கொள்கை வேறுபாடுகளாக வியாக்கியானம் செய்கிறார்கள். சுமந்திரனின் அணுகுமுறை அதிகம் மிதவாதத் தன்மைமிக்கது இணங்கிச் செல்லும் தன்மை மிக்கது.அதனை அவருடைய கொழும்புமைய நிலையான நலன்கள் பெருமளவுக்குத் தீர்மானிக்கின்றன. ஆனால் சிறிதரனின் அணுகுமுறை அதிகம் எதிர்ப்புத்தன்மை மிக்கது. ஒப்பீட்டளவில் சுமந்திரனை விடத் தீவிரமானது.
எதுவாயினும் ஒரு தேர்தல் நடக்குமாக இருந்தால்,அதாவது தேர்தலை தவிர்ப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றால், தேர்தலில் இருவருக்கும் இடையிலான முரண்பாடு கொள்கை முரண்பாடாகவே காட்டப்படும்.சிலசமயம் அது பிரதேச வாதமாகவோ அல்லது மத வாதமாகவோ மாறக்கூடிய ஆபத்துகளும் உண்டு.
அதை ஒரு கொள்கை வேறுபாடாக காட்டுவது சிறீதரனுக்கு ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக இருக்கும்.அனுகூலமாகவும் இருக்கும்.தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுக்கும் கொழும்பு மைய தமிழ் நிலைப்பாட்டுக்கும் இடையிலான ஒரு மோதலாக அதை உருவகித்தால் தனக்கு அதிகரித்த ஆதரவு கிடைக்கலாம் என்று அவர் நம்பக்கூடும்.அதாவது கொள்கை அடிப்படையில் தன் பக்கம் பலமாக உள்ளது என்று அவர் நம்பக்கூடும்.
ஆனால்,கடந்த 14 ஆண்டுகளிலும் அப்படியெல்லாம் கொள்கை வழியில் கட்சிகள் கட்டியெழுப்பப்பட்டனவா?தமிழ்மக்கள் கொள்கைகளுக்கு வாக்களிக்கிறார்கள் என்பது ஒரு “டெம்ப்லட்” வகை வசனமாக மாறி வருகிறதா? ஏனெனில் தமிழ் அரசியல்வாதிகள் தமது விசுவாசிகள் கூட்டத்தை கொள்கை அடிப்படையில் கட்டியெழுப்பியதை விட அதிகமாக எதிர்கால நலன்களின் அடிப்படையில்தான் கட்டியெழுப்பி வைத்திருக்கிறார்கள்.
எந்த நாடாளுமன்ற உறுப்பினரோடு நின்றால் தனக்கு உள்ளூராட்சி சபையில் ஆசனம் கிடைக்கும்; அல்லது மாகாண சபையில் ஆசனம் கிடைக்கும்; அல்லது நாடாளுமன்றத்தில் ஆசனம் கிடைக்கும் என்று கணக்குப் பார்த்தே பெரும்பாலான தொண்டர்கள் தலைவர்களைச் சூழ்ந்து காணப்படுகிறார்கள். அதாவது தேர்தல்மைய நோக்கு நிலையில் இருந்து சிந்தித்தே பெரும்பாலான கட்சி வலைப்பின்னல்கள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன.யாரோடு நின்றால் கட்சிக்குள் தங்களுடைய அடுத்தடுத்த கட்டப் பதவி உயர்வுகளைப் பாதுகாக்கலாம் என்றுதான் பெரும்பாலான கட்சித் தொண்டர்கள் சிந்திக்கிறார்கள்.
கொள்கைகளால் உருகிப் பிணைந்த ஒரு கட்டமைப்பாக கட்சி இருந்திருந்தால் கட்சிக்குள் உடைவு வரும்பொழுது அதை நாகரிகமாக கடந்து போக தெரிந்திருக்கும்.சமூக வலைத்தளங்களில் நிகழும் மோதல்களில் தேசத் திரட்சியைப் பாதுகாக்கும் குறைந்தபட்ச அரசியல் நாகரீகமாவது பேணப்பட்டு இருந்திருக்கும்.
ஆனால் அதைக் காணவில்லை.இது தமிழரசு கட்சிக்குள் மட்டும் நடக்கவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குள்ளும் நடந்தது.மணிவண்ணன் பிரிந்தபோது அதைக் காண முடிந்தது.நேற்றைய தோழன் இன்றைய துரோகி. இவ்வாறு முன்னாள் தோழர்களை இந்நாள் துரோகிகளாக்கும் அரசியல் பண்பாடு புதியது அல்ல.இது தமிழ் ஆயுத அரசியலில் இருந்து மிதவாத அரசியல் வரை உண்டு.
ஏற்கனவே பல தசாப்தங்களுக்கு முன்பு தமிழரசுக் கட்சிக்கும் தமிழ் கொங்ரசுக்கும் இடையே மோதல்களின்போது, இரு கட்சி ஆதரவாளர்களும் மல முட்டிகளை பயன்படுத்துவார்கள்.அதாவது மண் முட்டிகளுக்குள் மலத்தை நிரப்பிக் கொண்டு வந்து எதிராளியின் வீட்டு முற்றத்தில் உடைத்து விட்டுப் போவார்கள்.அதே மலமுட்டிப் பாரம்பரியம் இப்பொழுது சமூக வலைத்தளங்களுக்கும் வந்துவிட்டது. முன்பு கட்சிகளுக்கு இடையே அது இருந்தது.இப்பொழுது கட்சிகளுக்குள்ளேயே வந்துவிட்டது.அது தேசத் திரட்சியைப் பாதுகாக்கும் ஒர் அரசியல் பண்பாடு அல்ல. கொள்கைப் பற்றுறுதி இருந்தால் அப்படியெல்லாம் பொது வெளியில் விமர்சனங்கள் வராது. தமிழ்க் கட்சிகளின் விசுவாசக் கட்டமைப்புக்கள் பெருமளவுக்கு கொள்கையை விடவும் எதிர்காலப் பதவி உயர்வுகளை மையமாகக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்டவைதான்.
இப்படிப்பட்டதோர் அரசியற் சூழலில் தமிழரசுக் கட்சிக்குள், தலைவருக்கான ஒரு தேர்தல் நடந்தால்,அது தமிழரசியலின் ஜனநாயகச் செழிப்பை நிரூபிக்குமா?அல்லது தேசத் திரட்சியை உடைக்குமா? தேர்தலில் யார் வென்றாலும் குறிப்பாகக் கிளிநொச்சியில் தமிழரசுக்கட்சிக்குள் உடைவு ஏற்படுமா?