இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் இலங்கை அரசால் வடக்கில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் அடிப்படை உரிமை மீறல்கள் சம்பவங்களை வெளிப்படுத்தும் சம்பவங்களின் சாட்சியங்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்பாணத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமை தினமான இன்று (11)மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் அதன் தலைவர் யாட்சன் பிகிறாடோ தலைமையில் யாழ்பாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது. குறித்த போராட்டத்தின் போதே பொதுமக்களால் பல்வேறு மனித உரிமை மீறல் செயற்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பக கவனயீர்ப்பு போராட்டத்தில் வலி வடக்கில் இராணுவத்தால் மக்களுடைய காணிகள் அபகரிக்கப்பட்டு மக்கள் 33வருடங்களாக இன்னும் அகதி முகாம்களிளும் உறவினர்கள் வீடுகளிலும் வசிக்கும் அவலம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது, அதே நேரம் இலங்கை அரசாங்கத்தின் பயங்கரவாத தடைச்சட்டத்தால் கைது
செய்யப்பட்டிருக்கும் (PTA) இளைஞர்களின் நிலை, மற்றும் மன்னார் மாவட்டத்தில் மக்களின் விருப்பத்திற்கு எதிராக இடம் பெறும் கனிய மணல் அகழ்வு,காற்றாலை மின் உற்பத்தி செயற்திட்டம் மற்றும் பெண்களிற்கு எதிரான வன்முறைகள் தொடர்பான காட்சிபடுத்தலும் இடம் பெற்றது.
அதே நேரம் மன்னார் மற்றும் முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அதன் விசாரனைகளின் காணப்படும் தாமதத்தை வெளிப்படுத்துமுகமாக மனித புதைகுழியும் காட்சிபடுத்தப்பட்டிருந்தது அத்துடன் பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு,மற்றும் வடக்கு கிழக்கில் காணப்படும் மேச்சல் தரை தொடர்பான பிரச்சினைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அதே நேரம் அரசே காணமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே,மனித புதைகுழி தொடர்பான நீதியான விசாரணை வேண்டும்,போர் குற்றம் செய்தவர்களை நீதி முன் நிறுத்து,பாலியல் குற்றங்களுக்கு அரசே உடனே தண்டனை வழங்கு,வலி வடக்கு மக்களின் காணிகளை உடனே விடுதலை செய் போன்ற பல்வேறு பதாதைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் காட்சிபடுத்தியிருந்தனர் .
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மன்னார்,யாழ்பாணம்,கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள் ,சமூக ஆர்வளர்கள்,பெண்கள் அமைப்பினர்,மீனவ அமைப்பினர் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.