
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இரண்டாவது கடன் தவணையான 337 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று முதலாவது மீளாய்வு இடம்பெற்றதுடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் இந்த நிதி வசதி வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த கடனுதவி சுமார் 670 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கிறது.
கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி, இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட 48 மாத கால விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஒப்புதல் அளித்தது.
இதன் அடிப்படையில் இலங்கைக்கு உடனடியாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதற்கட்டமாக வழங்கப்பட்டன.
இதன் பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம், சர்வதேச நாணய நிதியத்தின் நிதிக்குழு 48 மாத கால விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான முதலாவது மதிப்பாய்வில் இலங்கை அதிகாரிகளுடன் அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தத்தை எட்டியது.
இதற்கான ஒப்புதலையே தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு வழங்கியுள்ளது.