
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் தாழமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால் இன்று(15.12.2023) முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
காற்றுச் சுழற்சியானது வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளதாகவும் இதன் நகர்வுப் பாதை தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதிக்குப் பின்னரே உறுதியாகக் கூற முடியும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தக் காற்றுச் சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கனமழை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் குறிப்பாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
மேலும் இம்மழையுடனான காலநிலை இன்று (15) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொடர்வதற்கான வாய்ப்புள்ளது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.