யாழில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்: வடக்கு ஆளுநரின் அறிவித்தல்!

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுவதைத் தொடர்ந்து கிராம மட்ட கலந்துரையாடல்கள் ஊடாக பொதுமக்களை தெளிவுபடுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

வட மாகாணத்தின் டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வுக் கூட்டம் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களும் கலந்துகொண்டனர்.

இதனிடையே வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கவும், பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கிராமிய மட்டத்தில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறும், வடிகான் துப்புரவு, ஒழுங்கான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், கைவிடப்பட்ட மற்றும் பராமரிப்பற்ற காணிகளில் நுளம்பு பெருகுவதை தடுக்க வேண்டும் எனவும் ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் வட மாகாண ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பராமரிப்பற்ற காணிகள் தொடர்பில், காணி உரிமையாளர்களுக்கு எதிராக விரைவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளுக்காக பொலிஸார் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளுமாறும் கௌரவ ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் பிளாஸ்டிக் பொருட்களை மாணவர்கள் வகுப்புகளுக்கு கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் எனவும், தினமும் காலைக் கூட்டத்தின் போது டெங்கு ஒழிப்பு தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், மாகாணத்திலுள்ள அனைத்து அரச திணைக்களங்களிலும் வாராந்தம் துப்புரவு பணிகளை மேற்கொள்ள திணைக்கள தலைவர்களால் அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

பொலிஸ் நிலையங்களில் உள்ள ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளில் அறிவித்தல்களை வழங்க முடியும் எனவும்;, சுற்றுசூழல் பாதுகாப்புக்கான பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கிராமிய மட்ட செயற்பாடுகளில் ஈடுபடுத்த முடியும் எனவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews