மன்னாரில் சீரற்ற காலநிலை காரணமாக 438 பேர், இடைத்தங்கல் முகாம்களில்!

மன்னார் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி, பாலியாறு கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த, 131 குடும்பங்களை சேர்ந்த 438 பேர், இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் உள்ள பாலியாறு பெருக்கெடுத்ததன் காரணமாக, தேவன்பிட்டி கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ள நிலையில், மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவர்களுக்கான சமைத்த உணவை, மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தினர் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் வழங்கி வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால், பெரும்பாலான தாழ்நில பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகி வருவதாக, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் கே.திலீபன் தெரிவித்துள்ளார்.

பாலியாறு, பறங்கியாறு நீர் மட்டம் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில், மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதி, வெள்ளத்தில் மூழ்கும் வாய்ப்பு காணப்படுவதனால், அவ் வீதியூடாக பயணம் செய்யும் மக்கள், மிகவும் அவதானத்துடன் பயணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews