
கடன் மறுசீரமைப்பின் ஊடாக, அடுத்த 10 ஆண்டுகளுக்கு, 10 பில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்ட கடன் சலுகை கிடைக்கும் என, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதிய உதவிச் செயற்திட்டம் தொடர்பில், இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்றுவதன் காரணமாக, ஜப்பான், சீனா, இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் நாடுகள் என்பன, இலங்கைக்குக் கடன் சலுகை வழங்குவதற்கு இணங்கியுள்ளன.
அதனால், கடன் மறுசீரமைப்பின் ஊடாக, அடுத்த 10 ஆண்டுகளுக்கு, 10 பில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்ட கடன் சலுகை எமக்குக் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கின்றோம்.
நாம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச் செயற்திட்டத்திற்கு உண்மையாக இருந்தால் மாத்திரமே, எதிர்வரும் காலங்களில், எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், இப்போது எமக்கு சலுகை அளிக்கும் நாடுகள், தொடர்ந்தும் அதனை வழங்கும்.
மாறாக, நாம் இந்தத் திட்டத்தில் இருந்து விலகுவதாக இருந்தால், வருடாந்தம் 6 பில்லியன் டொலர் கடன் தொகையை மீளச்செலுத்துவதற்கான இயலுமை, எமக்கு இருக்க வேண்டும்.
இந்த விடயத்தை நாட்டு மக்கள் புரிந்து கொள்வதும், அதற்கேற்றவாறு செயற்படுவதும் அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.