நீடித்து நிலைத்திருக்கும் நிர்மாண பணிகள் குழுமத்தின் மாவட்ட கூட்டம்!

நீடித்து நிலைத்திருக்கும் நிர்மாண பணிகள் குழுமத்தின் (Alliance for Sustainable Infrastructure) யாழ்ப்பாண மாவட்ட கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற அரசாங்க அதிபர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் பல்வேறு திணைக்கள அதிகாரிகள் பிரதேச சபை செயலாளர்கள், பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர்கள், முன்னாள் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், சமூக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் வருகை தந்திருந்தனர்.

இக் கூட்டத்தில் நீடித்து நிலைத்திருக்கும் நிர்மாண பணிகள் தொடர்பான குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு சமந்த அபயவிக்ரம அவர்கள் கலந்துகொண்டு இதன் நோக்கத்தை தெளிவுபடுத்தியிருந்தார்.

இதன் மூலம் மக்களுக்கு நிலை பேறான அபிவிருத்தி பணிகளை செயற்படுத்துவதோடு நிர்மாண பணிகளிலே ஊழல் அற்ற வெளிப்படையான மக்களுக்கு உகந்த சூழலுக்கு பாதகம் அற்ற நிலமைகளை ஏற்படுத்தி சிறந்த நிர்மாண பணிகளை உருவாக்குவது தான் இக்குழுமத்தின் நோக்கமாக உள்ளது என்று தெரிவித்தார்.

பல்வேறு உதாரணங்களுடன் கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு நிர்மாண பணிகளில் ஏற்பட்ட குறைபாடுகளும் ஒரு காரணமாக அமைந்திருந்தது என்றும் விளங்கப்படுத்தினார்.

அதன் பின்னர் இந்த சபையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் குழுமத்தை தேர்வு செய்யுமாறும் இதன் இணைத்தலைவர்களில் ஒருவராக SOND நிறுவனத்தின் பிரதிநிதியாக செந்துர்ராசா அவர்கள் இயல்பாகவே செயற்படுவார் என்றும் சமூகத்தின் பிரதிநிதியாக ஒருவரை தெரிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தலைவராக யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் கல்விமான்கள் பேராசிரியர்கள் முன்னாள் சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலரும் இக்குழுமத்தில் தாமாக முன்வந்து இணைந்திருந்தார்கள். மக்கள் குழுமத்தினுடைய (People’s Forum ) இந்த கூட்டங்கள் நடாத்தி பொதுமக்கள் சார்ந்த நிர்மாண பணிகள் தொடர்பான பிரச்சனைகளை உரிய மட்டத்துக்கு எடுத்துச் சென்று ஆவன செய்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews