
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பெரும் போக நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாதிப்பினால் விவசாயிகள் பலர் நட்டத்தை எதிர்கெண்டுள்ளனர். செய்கை மேற்கொண்டு இரண்டு மாதம் கடந்த நிலையில் நெற் கதிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.
முரசு மூட்டை, பன்னங்கண்டி, கண்டாவளை, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற வெள்ள அனர்த்தங்களில் விவசாயிகளின் நெற்செய்கை அழிவுறும் நிலையில், உரிய நஷ்ட ஈட்டினை பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இம்முறை இரணைமடு குளத்தின் நீர் வரத்து அதிகமாக காணப்பட்டதன் காரணமாக பலரது நெற்செய்கை மூழ்கியுள்ளதாகவும், விவசாயம் மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் ஆரம்பத்திலேயே இரணைமடு குளத்தின் நீரை திறந்து விடப்பட்டிருந்தால் இவ்வாறு பாதிப்பினை தவிர்த்திருக்கலாம் எனவும் கவலை வெளியிடுகின்றனர்.
இனிவரும் காலங்களிலாவது விவசாய நிலங்கள், விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் இரணைமடு குளத்திலிருந்து வெளியேற்றப்படுகின்ற மேலதிக நீரை வெளியேற்றுவதற்குரிய வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.