மின்சார கட்டணத்தை குறைப்பது குறித்த யோசனை எதிர்வரும் 15 ஆம் திகதி ஒப்படைக்கப்படும் என இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களும் கோரப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
பரிந்துரைகள் முன்வைக்கப்படும்
அதன் பின்னர் மின்சார கட்டணங்களை குறைப்பது தொடர்பிலான பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என ஆணைக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரம் அளவில் மின்சார கட்டணங்களை குறைப்பது குறித்த யோசனைகளுக்கு அனுமதி பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை மின்சார சபையின் செயல்பாடுகளை சுயாதீனமான நிறுவனம் ஒன்றின் மூலம் கணக்காய்வு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சுயதீன கணக்காய்வு நடவடிக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் பூர்த்தி ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.