உலகத்தமிழர் பேரவையின் இமாலயப்பிரகடனம் பலத்த எதிர்வினைகளை தமிழ்த்தேசியப்பரப்பில் உள்ளவர்களிடம் உருவாக்கியுள்ளது. தமிழ்த்தேசியக்கட்சிகள் , சிவில் அமைப்புக்கள், கருத்துருவாக்கிகள் என பல தரப்பினர் எதிர்வினைகளைக் காட்டியுள்ளனர். தமிழரசுக்கட்சியில் சுமந்திரன், சம்பந்தன் , சாணக்கியன் மட்டுமே ஆதரித்துள்ளனர். ஏனையவர்கள் எதிர்த்துள்ளனர். சுமந்திரன் மேற்படி பிரகடனத்தில் ஒற்றையாட்சி இல்லை, அதிகாரப்பகிர்வு இருக்கிறது, பொறுப்புக்கூறல் இருக்கிறது என நியாயப்படுத்திய போதும் தங்களுக்கு இதில் தொடர்பில்லை எனக்கூறியிருக்கிறார். எதிர்ப்புக்கள் கடுமையாக வந்ததினாலேயே தொடர்பில்லை எனக் கூறியிருக்கின்றார் எனினும் பிரகடனத்தை நியாயப்படுத்த தவறவில்லை.
சிவில் முக்கியஸ்தர்களில் யாழ் ஆயர் “இது ஒரு தொடக்கப்புள்ளி” எனக் கூறியிருக்கின்றார். ஆறு திருமுருகன் முதலில் ஆக்கிரமிப்புக்களை நிறுத்துவதற்கு வழிகளைக் காணுங்கள் எனக் கூறியிருக்கின்றார். வேலன் சுவாமிகள் , தென்கயிலைஆதின சுவாமிகள் ஆகியோர் கடும் அதிர்ப்தியை தெரிவித்துள்ளனர். தமிழ் சிவில் சமூகமும் பலத்த கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பௌத்த குருமார்களோடு உரையாடல் ஒன்றிற்கு செல்வதை எவரும் எதிர்க்கவில்லை. அது அவசியம் என்பதே பொதுவான அபிப்பிராயமாக உள்ளது. தமிழ் மக்களின் சார்பில் பிரகடனம் ஒன்றை விடுத்தமையும,; அது தமிழ் மக்களின் அபிலாசைகளை போதியளவு பிரதிபலிக்காமையம் தான் எதிர்வினைகளைக் கொண்டு வந்துள்ளன. இமாலயப் பிரகடனம் உலகத்தமிழர் பேரவையின் தனி ஆவர்த்தனம் அல்ல. மேற்குலகம் , சுமந்திரன் குழு, ரணில் அரசாங்கம் என்பவற்றின் கூட்டு முயற்சியே இதுவாகும். சுவிஸ்லாந்து அரசாங்கம் இதற்கான நிதி உதவியை வழங்கியதாகக் கூறப்படுகின்றது. முக்கிய பௌத்த மத நிறுவனங்களான அஸ்கீரியபீடம் , மல்வத்தை பீடம் , ராமாண்னா பீடம் என்பவற்றின் ஆதரவு உள்ளது என உலகத் தமிழர் பேரவையினர் கூறிய போதும் அந்நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இது பற்றி எந்த வித அறிக்கைகளையும் இதுவரை வெளியிடவில்லை.
இந்த விவகாரத்தில் மேற்குலகத்தின் வியூகம் தெளிவானது. தமிழ்த் தேசியத்தை பலவீனப்படுத்துவதே அவ்வியூகமாகும். தமிழ்த்தேசியவாதத்தையும் பெருந்தேசிய வாதத்தையும் பலவீனப்படுத்தாமல் மேற்குலகத்தினால் தமது நிகழ்ச்சி நிரலை இலங்கையில் நகர்த்த முடியாது. பெருந்தேசிய வாதத்தை பலவீனப்படுத்துவதற்காகவே ராஜபக்சாக்கள் இலக்காக்கப்பட்டனர். பெருந்தேசிய வாதத்திற்கு ஒரு அரசியல் பலத்தை ராஜபக்சாக்கள் வழங்கிக்;கொண்டிருந்தனர். மறு பக்கத்தில் பெருந்தேசிய வாதம் ராஜபக்சாக்களுக்கு ஒரு கவசமாக இருந்தது என்பதும் உண்மையே! ராஜபக்சாக்கள் நாட்டை வங்குரோத்தாகிய குற்றவாளிகளாக இருப்பதால் பெருந்தேசிய வாதத்திற்குள் தஞ்சமடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியும் , ஜே.வி.பியும் தங்களது பேரினவாத நிலைப்பாட்டை சற்று அடக்கியே வாசிக்கின்றனர். ராஜபக்சாக்களின் நிலை தங்களுக்கும் வரலாம் எனக் கருதியிருக்கலாம்.
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தனது நிகழ்ச்சி நிரலுக்கு தடையாக இருப்பவர்களை பலவீனப்படுத்த எவற்றையும் செய்யும். இது இக்கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். ஐக்கிய மக்கள் சக்தி தமிழ் வாக்குகளிலும் தங்கியிருப்பதினால் சற்று அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயம் உண்டு. ஜே.வி.பி க்கு அந்த நிர்ப்பந்தம் இல்லாவிட்டாலும் இனப்பிரச்சினையை தீர்க்காமல் நாட்டின் தற்போதைய பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பதை அனுபவ ரீதியாக அது பெற்றிருக்கின்றது. இதனாலும் அடக்கி வாசிக்க முற்படுகின்றது தவிர ஜனாதிபதி தேர்தலில் வெல்லலாம் என்ற நிலை ஜே.வி.பி க்கும் இருப்பதனால் குறைந்தளவிலாவது தமிழ் வாக்குகளை அதுவும் எதிர்பார்க்கின்றது. இந்தத் தடவை கடும் போட்டிக்கான சூழல் இருப்பதால் சில ஆயிரம் வாக்குகள் கூட வெற்றியை தீர்மானிப்பதாக இருக்கும்.
தென்னிலங்கையின் இந்த அரசியல் சூழல் காரணமாக இன்று பெருந்தேசியவாதம் விமல்வீரவன்ச, உதயகம்மன்பல போன்றோரின் சிறிய கட்சிகளுக்கிடையே கட்சிகள் மட்டத்தில் சுருங்கிக் கிடக்கின்றது. ஆனால் மறுபக்கத்தில் பௌத்தமத நிறுவனங்கள் தற்போதும் பலமாகவே இருக்கின்றன. அரசியல் 13 வது திருத்தத்தை கூட நடைமுறைப்படுத்த விடாமல் தடுக்கும் வல்லமையை அவை கொண்டிருக்கின்றன.
பெருந்தேசியவாதத்தை சற்று முடக்கி வைத்திருக்கின்ற அதேவேளை தமிழ்த்தேசியவாதத்தையும் முடக்குவதற்காகவே உலகத்தழிழர் பேரவை கழத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளது. இதற்காக சில பௌத்த குருமார்களும் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த பௌத்த பிக்குகள் தீர்மானம் எடுக்கும் நிலையில் உள்ளவர்கள் அல்லர்.
மேற்குலகம் இலங்கையை தனது மேலாதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதற்காக இந்தோபசுபிக் மூலோபாய கொள்கையை நகர்த்தி வருகின்றது. அந்த நகர்த்தலுக்கு சாதகமாகவே பொருளாதார நெருக்கடியையும் பயன்படுத்துகின்றது. மேற்குலகின் இந்த நகர்வுகளுக்கு இரண்டு விடயங்கள் தடையாக உள்ளன. ஒன்று இலங்கையின் இனப்பிரச்சனை. இரண்டாவது சீனாவின் ஆதிக்கம். இந்த இரண்டிற்கும் தீர்வு காணாமல் மேற்குலக இந்திய கூட்டினால் தமது இந்தோபசுபிக் மூலோபாய நிகழ்ச்சி நிரலை நகர்த்த முடியாது. இவை தொடர்பில் மேற்குலகத்ததிற்கும் இந்தியாவுக்கும் “சாண் ஏற முழம் சறுக்குகின்ற” நிலை தான்.
இந்தியா இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13 வது திருத்தத்தையே முன்வைக்கின்றது. அதைக் கூட நிறைவேற்ற இலங்கை அரசு தயாராக இல்லாதினால் இந்தியா கையறு நிலையில் நிற்கின்றது. மேற்குலகம் இவ்வளவு காலமும் இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவுக்கு பின்னாலேயே நின்றது. இந்தியாவின் முயற்சி கைகூடாததினால் தற்போது விவகாரத்தை தன் கையில் எடுத்திருக்கின்றது.
மேற்குலகம் இலங்கையின் இனப்பிரச்சினையை இறைமை அரசியலாக பார்க்கவில்லை. மாறாக அடையாள அரசியலாகவே பார்க்கின்றது எனவே தனது அடையாள அரசியலுக்கு கள நிலைமையை கொண்டுவருவதற்காகவே உலகத்தமிழர் பேரவையை களமிறக்கிவிட்டிருக்கிறது. அடையாள அரசியலை நிலை நிறுத்த வேண்டும் என்றால்; தமிழ்த்தேசிய அரசியலை தரமிறக்க செய்ய வேண்டும். அதற்காக அரசசார்பற்ற நிறுவனங்களை இறக்கி முயற்சித்த போதும் வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. தற்போது தமிழ் மக்களிலிருந்து ஒரு தரப்பையே களமிறக்கிவிட்டிருக்கிறது.
உலகத்தமிழர் பேரவையின் நகர்வுகளில் கொள்கை தவறுகளும் இருக்கின்றன. அணுகுமுறைத்தவறுகளும் இருக்கின்றன. கொள்கைத்தவறுகளில் முதலாவது சிங்கள பௌத்த மேலான்மை அடிப்படையிலான அரசுக்கட்டமைப்பை அப்படியே ஏற்றுக் கொண்டு வளைந்;து கொடுத்தல் மூலமாக விவகாரங்களை கையாள முற்பட்டதாகும். பௌத்த மேலாண்மைக்கருத்தியல் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த வளைந்து கொடுத்தல் பெருந்தேசியவாதத்தின் இருப்புக்கு முட்டுக் கொடுக்குமே தவிர தமிழ்த்தேசிய அரசியலுக்கு எந்தப்பயனையும் தராது.
இரண்டாவது தவறு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் கோட்பாட்டு அடிப்படைகளை திம்பு மாநாட்டில் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் புரட்சிகர அரசியலை முன்னெடுத்த விடுதலை இயக்கங்களும் கூட்டாக முன்வைத்திருக்கின்றன. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம், வடக்கு கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள், தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு என்பவையே அந்த கோட்பாட்டு அடிப்படைகளாகும். எந்தவொரு பேசு;சுவார்த்ததையின் போதும் இதுவே அடிப்படையாக இருக்க வேண்டும். இவற்றை ஏற்றுக் கொண்ட பின்னரே பேசு;சுவார்ர்தையை ஆரம்பிக்கலாம்.
ஆனால் இமாலயப்பிரகடனம் இந்த கோட்பாட்டு அடிப்படைகளை சிறிது கூட பிரதிபலிக்கவில்லை பிரகடனத்தின் முதலாவது கூற்று “தங்களுடைய அடையாளம் மற்றும் பெருமையை இழந்து விடுவோமோ என்ற பயம் எந்தவொரு சமூகத்திற்கும் ஏற்படாத வகையில் நாட்டின் பல்வகைத்தன்மையை பேணிப்பாதுகாத்தலும் ஊக்குவித்தலும்” எனக்கூறுகின்றது. இது அடையாள அரசியலுக்குரிய கூற்றுக்களே தவிர இறைமை அரசியலுக்கான கூற்றுக்கள் அல்ல. இறைமை அரசியலுக்கான கூற்றுக்கள் என்றால் தேசிய இன அங்கீகாரம், இறைமை அங்கீகாரம் சுயநிர்ணய உரிமை அங்கீகாரம், சுயநிர்ணய உரிமையை நடைமுறைப்படுத்துவதற்கான ஆட்சிப்பொறிமுறை என்பவற்றை உள்ளடக்;கியிருக்க வேண்டும்.
மூன்றாவது கூற்று மாகாணமட்ட அதிகாரப்பகிர்வைப்பற்றி அதுவும் மேலோட்டமாகக் கூறியிருக்கின்றது. தமிழ் மக்களின் கூட்டிருப்பு, கூட்டுரிமை , கூட்டடையாளம் என்பவற்றை பேணக்கூடிய தாயக ஒருமைப்பாட்டைபற்றி எதுவும் பேசவில்லை. மாகாண மட்டத்தில் அதிகாரப்பகிர்வு என கூறுவதன் மூலம் திம்பு மாநாட்டில் முன்வைக்கப்பட்ட வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் என்பது மறுதலிக்கப்பட்டிருக்கின்றது. தவிர அதிகாரப் பகிர்வு என பொதுவாகக் கூறினாலும் அதன் தன்மை பற்றி எதுவும் கூறவில்லை.
மேலும் ஐந்தாவது கூற்று “பொறுப்புக்கூறல் உள்ளடங்கலாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது” எனக் கூறுகின்றது. பொறுப்புக் கூறல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி எதுவும் கூறவில்லை. தமிழ் மக்கள் உள்நாட்டு நீதிப் பொறிமுறையில் நம்பிக்கை இழந்து பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச விசாரணையே கோரி நிற்கின்றனர். இவை பற்றி பிரகடனத்தில் எதுவுமில்லை.
தவிர தமிழ் மக்களின் அடிப்படை விடயங்களுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் புலம்பெயர்மக்களின் முதலீடுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. பிரகடனத்தின் இரண்டாவது கூற்று புலம்பெயர் மக்களின் முதலீடு பற்றியே கூறுகின்றது தமிழ் மக்களின் நலன்களுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாது புலம்பெயர் மக்களின் முதலீட்டை கோருவது வெற்றுக்காசோலையில் கையெழுத்து வைக்க வேண்டும் எனக் கூறுவதற்கு சமமானது.
அடுத்தது அணுகுமுறைத்தவறு இது மிகவும் அருவருக்கத்தக்கதாக இருந்திருக்கின்றது. உலகத்தமிழர் பேரவை தமிழ் மக்களை முழுமையாக பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு அமைப்பல்ல. அது புலம்பெயர் மக்களைக் கூட முழுமையாக பிரதிபலிக்கவில்லை. அங்குள்ள பிரதான அமைப்புக்களில் ஒன்றாகவும் இருக்கவில்லை. ஒரு உதிரி அமைப்பாவே இருக்கின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சி எதுவாக இருந்தாலும் அது பெரும்பான்மை தமிழர்களை பிரதிபலிப்பதற்காக இருக்க வேண்டும். அதுவும் குறிப்பாக தாயகத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். இலண்டனில் உள்ள ஓரிருவர் மட்டும் தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்க முடியாது.
இரண்டாவது எந்த அணுகுமுறையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். கிணற்றுக்குள் வீழ்ந்து கிடப்பவனையும், கிணற்றுக்குள் வெளியே நிற்பவனையும் சமனாக கருத முடியாது. முதலில் கிணற்றுக்குள் வீழ்ந்து கிடப்பவனை வெளியே எடுக்க வேண்டும். பின்னர் தான் ஏனையவற்றை பேசலாம்.
சிங்கள தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு செல்லும் போது சிங்கள தரப்பு முதலில் நல்லெண்ணத்தை காட்டுதல் அவசியம். தமிழ் மக்கள் அடிப்படைப் பிரச்சினை என்கின்ற அரசியல் தீர்வு பிரச்சினை, பொறுப்புக்கூறல் பிரச்சினை , ஆக்கிரமிப்புப் பிரச்சினை, அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் போனோர் விவகாரம் என்கின்ற இயல்பு நிலையைக் கொண்டு வருதல் பிரச்சினை , அன்றாடப்பிரச்சினை என்கின்ற ஐந்து வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இவற்றில் ஆக்கிரமிப்புப் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை காணாமல் போனோர் பிரச்சினை போன்ற எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு நல்லெண்ணத்தை காட்ட வேண்டும். இந்த நல்லெண்ண பிரதிபலிப்புக்கள் எவையும் பிரகடனத்தில் இருக்கவில்லை.
இன்றைய தொல்லியல் ஆக்கிரமிப்புக்களுக்கு பௌத்த பிக்குகளே காரணமாக உள்ளனர். மட்டக்களப்பு மேச்சல்தரை விவகாரம் தொடர்பாக ஒரு பிக்கு சண்டித்தனம் செய்கின்றார். இவை பற்றியெல்லாம் பிரகடனம் எதுவும் பேசவில்லை.
மொத்தத்தில் கொள்கைத்தவறுகளையும், அணுகு முறைத்தவறுகளையும் கொண்ட இந்த பிரகடனம் தமிழ் மக்களால் நிராகரிக்கப்படவேண்டியதே!
வேண்டுமானால் முதன்முதலாக பௌத்தபிக்குமார்களை ஒரு தமிழ்க்குழு கையாளத்தொடங்கியுள்ளது. இந்த செயற்பாட்டை மட்டும் வரவேற்கலாம்.