யாழில் கடந்த சில நாள்களில் குற்றச் செயல்கள் சடுதியாகக் குறைவு!சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பொலிஸாரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாள்களில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைந்துள்ளது என்று யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பொலிஸாரால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் போதைப் பொருள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பலர் கடந்த சில நாள்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஏனைய குற்றச் செயல்கள் பெருமளவில் குறைந்துள்ளன.

இது தொடர்பில் யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்தபோது-
கடந்த சில நாள்களில் மட்டும் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 4 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 30 பேரும், போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 20 பேர் போதைக்கு அடிமையானவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
போதைப்பொருள் தொடர்பான கைதுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், மாவட்டத்தில் ஏனைய குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பெரும்பாலான குற்றச் செயல்கள் போதைக்கு அடிமையானவர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. பொலிஸாரின் இந்தக் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறும். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் – என்றார்

Recommended For You

About the Author: Editor Elukainews