
தற்போது வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உண்மையில் தங்களால் முடிந்த அளவு, இருக்கின்ற வளங்களை கொண்டு எவ்வளவு செய்ய முடியுமோ அவற்றை செய்கின்றார்கள். ஆனால் ஒரு சிலரது நடவடிக்கையால், அவர்களுடைய கவனயீனத்தால் உயிர்களும் போயிருக்கின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.




இன்றையதினம் அவரது வட்டுக்கோட்டை அலுவலகத்தில் அழகுக்கலை பயிற்சி நெறிகளை ஆரம்பித்து வைத்த பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறான செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒட்டுமொத்தமாக வைத்தியர்களையோ, தாதியர்களையோ அல்லது வைத்திய உதவியாளர்களையோ நாங்கள் குற்றம் சொல்ல முடியாது. தற்போது விசாரணைக்காக உத்தரவுகள் இடப்பட்டுள்ளன. ஒன்றல்ல இரண்டல்ல இவ்வாறு பல விடயங்கள் நடந்துவிட்டன. அவை பத்திரிகைகளிலும் வந்துள்ளன.
எனவே பொறுப்பாக இருக்கின்றவர்கள், உதவியாக இருக்கின்ற தாதியர்களையோ மற்றைய உதவியாளர்களையோ நேரடியாக கண்காணிப்பதன் மூலம் சில விடயங்களை தடுக்கலாம். இவ்வாறு நடைபெறுகின்றது குறைவாக உள்ளது. ஒருடத்தில் இருந்து கொண்டு அதைச் செய் இதைச் செய் என்று கூறுகின்றீர்கள்.
ஆனால் இந்தமாதிரியான தவறுதலான நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல கொழும்பிலும் நடைபெறுகின்றது. கொழும்பில் ஒருவருக்கு சேலைன் போடுவதற்காக கையில் ஏற்றிய ஊசி பிழையாக ஏற்றப்பட்டு அவருடைய கையும் கறுப்பாக மாறிய நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவரது கை தப்பியுள்ளது.
இந்த விடயங்களை தீர விசாரித்து உண்மைகளின்படி நடக்க வேண்டும். இல்லா விட்டால் அது ஒட்டுமொத்த வைத்தியர்களையோ அல்லது தாதியர்களையோ, உதவியாளர்களையோ தாக்கக்கூடியதாக இருக்கும்.
எத்தனையோ ஆயிரம் பேர் வேலை செய்யும் இடத்தில் கவனயீனமாக செயற்படுபவர்களை தண்டிக்க வேண்டியது நிர்வாகத்தின் கடமையாகும் என்றார்.