
ஸரிகமப இசை நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான கில்மிஷா உதயசீலன் அவர்கள் நேற்றையதினம் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

இவ்வாறு வருகை தந்த கில்மிஷாவிற்கு பலாலி விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் தபாற் கட்டு சந்தியில் இருந்து முத்துச் சப்பறத்தி அழைத்து வரப்பட்டார். இதன்போது கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்ட செண்டை மேளக்குழுவினர், தவில் கச்சேரி குழுவினர் மற்றும் குதிரை ஆட்டம் பொம்மலாட்டம் என்பன அணிவகுக்க அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அதன்பின்னர் அவரது குலதெய்வத்தின் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து அவர் பல்லக்கு மூலம் தூக்கிச் செல்லப்பட்டு நிகழ்வு நடைபெறும் மைதானத்தை அடைந்தார்.

அதன்பின்னர் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. பின்னர் கௌரவிப்புக்கள், பாராட்டுகள் இடம்பெற்றதுடன் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. அத்துடன் இலங்கையின் புகழ்பூத்த இசைக்குழுவான ஆர்.வி.வாசனின் சாரங்கா இசைக்குழுவினர் பின்னணி இசையை வழங்க கில்மிஷாவின் பாடல்கள் இடம்பெற்றன. அவரின் பாடல்களை கேட்ட ரசிகர்கள் ஆரவாரமடைந்தனர்.
கில்மிஷாவின் இசைத் திறமையை அறிந்து அவர்களுக்கு ஆரம்பத்தில் பாடுவதற்கான களத்தினை அமைத்துக் கொடுத்ததுடன் அவருக்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் சாரங்கா இசைக்குழுவினரே வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.