ஜனாதிபதி கோத்தபாய ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்துடனான
சந்திப்பின் போது எடுத்துரைத்த விடயங்கள் தமிழ்மக்கள் மத்தியில் பலத்த கோபத்தையம் எரிச்சலையும் உருவாக்கியுள்ளன. ஜனாதிபதி புலம் பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்தல், அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குதல், காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குதல், உள்ளகப்
பொறிமுறையின் அடிப்படையில் விவகாரங்களுக்குத் தீர்வு காணுதல் எனும் நான்கு விடயங்கள் பற்றி பிரதானமாகக் எடுத்துரைத்திருக்கின்றனர்.
இவற்றில் புலம்பெயர் மக்களுக்கு அழைப்புவிடுத்தமையும், காணாமல்
போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவோம் எனக் கூறியமையும் தான்
தமிழ் மக்கள் மத்தியில் பலத்த கோபத்தையும் எரிச்சல்களையும்
உருவாக்கியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் அமைப்புக்களையும் அங்குள்ள செயற்பாட்டு முக்கியஸ்தர்களையும் பகிரங்கமாகத் தடை செய்துவிட்டுத்தான்
ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்திருக்கின்றார். இதன் மூலம் புலம்பெயர் மக்கள் தவிர்க்க முடியாத சக்திகள் என்பதை அவர் மறைமுகமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
புலம்பெயர் மக்கள் தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவவரை பல
வழிகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாவர். யூதப் புலம்பெயர் சமூகத்தின் முக்கியத்துவம் போல் இல்லாவிடினும் அதனை நோக்கி
வளர்ந்துகொண்டிருக்கின்றனர் எனக் கூறக் கூடிய நிலையில் உள்ளனர். இம்
முக்கியத்துவங்களுள் முதலாவது 2009க்குப் பின்னர் அதாவது ஆயுதப்
போராட்டம் மௌனிக்கப்பட்டதற்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை
தக்கவைத்ததிலும் பாதுகாத்ததிலும் புலம்பெயர் மக்களுக்குரிய பங்காகும். அதுவும் நல்லாட்சி எனக் கூறப்படுகின்ற ரணில்-மைத்திரி ஆட்சிக் காலத்தில் இவர்களது பங்கு அளப்பரியதாக இருந்தது. இக் காலத்தில் தமிழ்த் தலைமைகளை தமது
பொக்கற்றுக்குள் வைத்துக் கொண்டு தமிழ்த் தேசிய அரசியலை
நீர்த்துப்போகச் செய்வதற்கான நிகழ்ச்சி நிரலை சர்வதேச சக்திகள் என
அழைக்கப்படுகின்ற அமெரிக்க-மேற்குலக இந்தியக் கூட்டு நகர்த்தியிருந்தது. அந்த நிகழ்ச்சி நிரலை பலவீனப்படுத்தி தமிழ்த்தேசிய அரசியலின் இருப்பை பாதுகாத்ததில் புலம்பெயர் மக்களுக்கு அளப்பரிய பங்கு உண்டு. தாயகத்தில் அதனைப் பாதுகாக்கும் செயற்பாட்டை ஆரம்பத்தில்
முன்னெடுத்தவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தான். பல்வேறு
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அதற்கான கோட்பாட்டுத் தளத்தையும்,
செயற்பாட்டுத் தளத்தையும், கஜேந்திரகுமார் உருவாக்கியிருந்தார். இதன் தொடர்ச்சியாக இதனை மக்கள் மயப்படுத்தும் பணியை தமிழ் மக்கள் பேரவை மேற்கொண்டது. நீதியரசர் விக்கினேஸ்வரனின் பங்களிப்பு இதில் வலுவானதாக இருந்தது. தாயகத்தில் செயற்பட்ட இச் சக்திகளுக்கும் புலம்பெயர் சக்திகளுக்கும்
இடையேயான கூட்டுத்தான் இதனைப் பாதுகாத்தலில் முக்கிய பங்கு வகித்தது எனலாம். இச் சக்திகளின் வலுவான கூட்டுச் செயற்பாடுதான் கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தனித்த ஓட்டத்தையும் பலவீனப்படுத்தியிருந்தது.
கூட்டமைப்பின் மொத்த வியாபாரத்தையும் தடுத்திருந்தது.
இரண்டாவது முக்கியத்துவம் தமிழ் மக்களது உலகளாவிய அரசியல்
போராட்டமாகும். யாழ் பல்கலைக் கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்
தூபி தகர்க்கப் பட்டமைக்கான போராட்டம் பொத்துவில் முதல்
பொலிகண்டிவரையிலான போராட்டம் என்பன வளர்ச்சியடைந்தமைக்கு
புலம்பெயர் மக்களே பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்தனர். இன்று கோத்தபாய அரசாங்கம் மிகவும் அச்சப்படுகின்றவிடயம். இந்த உலகளாவிய அரசியல் போராட்டம் தான்.
மூன்றாவது முக்கியத்துவம் இன அழிப்புக்கு சர்வதேச நீதிகோரும்
செயற்பாட்டில் புலம்பெயர் மக்களின் பங்களிப்பாகும்.
இந்த விவகாரத்தில்
தாயக மக்களின் பங்களிப்பு பெரிதாக இருந்தது எனக் கூறிவிட முடியாது. அதில்
அதிகம் பங்களிப்பை மேற்கொண்டவர்கள் புலம்பெயர் மக்களே. ஜெனிவாவில்
அவர்களுடைய பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது. சர்வதேச வல்லுனர்களைக் கொண்டு பிரட்மன் விசாரணையை நடத்தியதிலும் இவர்கள் முன்னிலை வகித்தனர்.
நான்காவது புலம்பெயர் நாடுகளில் ஒரு அரசியல் சமூகமாக, புலம்பெயர் மக்கள் மாறி வருவதாகும். யூத சமூகம் போல இல்லாவிடினும், தாம் வாழும் நாடுகளின் ஆட்சி அதிகாரக் கட்டமைப்பில் கணிசமான செல்வாக்கினை இவர்கள் செலுத்துகின்றனர். கனடாவில் இது அதிகமாக உள்ளது
எனலாம். புலம்பெயர் நாடுகளிலேயே அதிகளவு புலம்பெயர் தமிழர்கள்
வாழ்வது கனடாவில் தான். அங்கு தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது
நிரந்தரமாகிட்டது. மத்திய பாராளுமன்றத்திற்கு ஹரி ஆனந்தசங்கரி மூன்றாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். ஒன்ராரியோ
மாகாண பாராளுமன்றத்தில் லோகன் கணபதியும், விஜய் தணிகாசலமும்
உறுப்பினர்களாக உள்ளனர். இந்தமாதம் இடம்பெற்ற பாராளுமன்றத்
தேர்தலில் மேலும் இரு தமிழர்கள் இரண்டாம் நிலைக்கு வந்துள்ளனர். இங்கு ஒரு கட்சியில் மட்டுமல்ல பிரதான கட்சிகள் அனைத்திலும் தமிழர்கள் செல்வாக்குச் செலுத்தும் நிலை காணப்படுகின்றது. ஹரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சி சார்பில் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். லோகன் கணபதியும், விஜய்
தணிகாசமும் கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
கனடாவுக்கு வெளியே நோர்வேயில் கம்சாயினி குணரட்னம்
பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். பல இனங்கள் செறிந்து வாழும் தொகுதியில் இருந்து அனைத்து இன மக்களின்
ஆதரவுடன் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகின்றது.
தமிழ்த்தேசிய சக்திகளுக்கு இவர் தொடர்பாக பல விமர்சனங்கள் இருந்தாலும் இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இவரது வெற்றி மகிழ்ச்சியளிக்கக்
கூடியதே பிரித்தானியாவிலும் தமிழ் மக்கள் வலிமையான நிலையான நிலையில் உள்ளனர் எனக் கூறலாம். அங்குள்ள பிரதான கட்சிகளான தொழிற்
கட்சியிலும், கன்சர்வேடிவ் கட்சியிலும் தமிழ் மக்களுக்கு செல்வாக்கு உண்டு. பல தொகுதிகளில் அங்கு வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பவர்களாக தமிழ் மக்களே உள்ளனர். இவை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு வெளியேயான அந்நாட்டின் அரசியல் செயற்பாட்டில் புலம்பெயர் தமிழ் மக்கள்
வளர்ச்சியடைந்து வருகின்றனர் என்பதையே காட்டுகின்றது. ஐந்தாவது முக்கியத்துவம் புலம்பெயர் மக்கள் தாயக மக்களுக்கும்
உலகத்தமிழர்களுக்குமிடையே ஒரு இணைப்புப் பாலமாக இருக்கின்றமையாகும்.
இந்தியா, மலேசியா, தென்னாபிரிக்கா, சிங்கப்பூர் மொறீசியஸ்
போன்ற நாடுகளில் வாழும் தமிழக வம்சா வழித்தமிழர்களுக்கும் புலம் பெயர் தமிழர்களுக்குமிடையே நெருக்கமான தொடர்பு உண்டு. தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டமைக்கும், மொறீசியஸ்சில்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கட்டப்பட்டமைக்கும், புலம் பெயர் மக்களே காரணமாவார். இந்தியாவில் தமிழ் நாட்டிற்கு வெளியே பல்வேறு
மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களுடனும் நெருக்கமான தொடர்பு புலம் பெயர் மக்களுக்கு உண்டு.
ஆறாவது முக்கியத்துவம் புலம்பெயர்; மக்களின் பொருளாதார
வலிமையாகும். இலங்கை அரசாங்கத்தின் வருடாந்த வரவு செலவுத்திட்ட நிதியை விடப்
புலம் பெயர் மக்களின் நிதிப்பலம் உயர்வானது. போர்க்காலத்தில் தமிழ்
மக்களை பட்டினியிலிருந்து பாதுகாத்தது புலம்பெயர் மக்களின் உதவிகள் தான்.
தற்போதும் கூட போரினால் பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைப்
பாதுகாப்பதில் அவர்களின் பங்களிப்பு உன்னதமாக உள்ளது. பலர் சிறந்த
தொழிலதிபர்களாகவும் சிறந்த வர்த்தகர்களாகவும் உள்ளனர். வர்த்தகத்தில் சிறப்புப்தேர்ச்சினைக் கூட பெற்றிருக்கின்றனர் எனக்கூறலாம். கனடா ஸ்காபுறோவில் உள்ள சிறந்த தமிழ் சாப்பாட்டுக்கடைகள் போல
கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் கூடக்கிடையாது.
புலம் பெயர் மக்களின் இந்த முக்கியத்துவங்கள் தான் இலங்கை
அரசாங்கத்தைப் பொறுத்தவரை அவர்களைத் தவிர்க்க முடியாத சக்தி
ஆக்கியிருக்கின்றது. 2009 க்குப் பின்னர் 11 வருட கால அனுபவத்தில்
இலங்கை அரசாங்கம் இதனை நன்றாகவே புரிந்து கொண்டிருக்கின்றது. யானையின்
காதுக்குள் சென்றிருக்கும் எறும்புக் கூட்டங்கள் போல வலிமையான குடைச்சல்களை இலங்கை அரசாங்கத்திற்கு அவர்கள் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
முள்ளிவாய்க்காலுடன் அனைத்தும் முடிந்து விட்டது என நினைத்துக்கொண்டிருந்த
ஆட்சியாளர்களுக்கு போர்க்காலத்தை விட கடினமான நிலை உருவாகி வருகிறது என்ற கலக்கம் உருவாகியுள்ளமைக்கும் இவர்களின் முக்கியத்துவம் தான் காரணம்.
தமிழ்த்தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத வலுவான சக்திகள் புலம்
பெயர் மக்கள். இந்த முக்கியத்துவத்தை புலம் பெயர் மக்கள் தெளிவாகப் புரிந்து
கொள்ள வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் மூலோபாயங்களையும்
தந்திரோபாயங்களையும் வகுத்துக் கொண்டு செயற்படுவதற்கு அவர்கள் தயாராக வேண்டும். ஒருங்கிணைந்த அரசியல் என்பது இதில் மிகவும் முக்கியமானது. புலம் பெயர் அமைப்புக்கள் தமக்குள் என்னதான் முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அந்த முரண்பாடுகளுக்குள் பொதுப்புள்ளியைக் கண்டு
பிடித்து அதனைப்பலப்படுத்தி ஒருங்கிணைந்த அரசியலைச் செய்ய முன்வர வேண்டும். இந்த ஒருங்கிணைவு அரசியல் தாயகத்தில் செயற்படும் அரசியல் சக்திகளுக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும்.
புலம் பெயர் மக்கள் தமிழ்த்தேசிய அரசியலுக்குக் கிடைத்த மிகப்பெரும்
பொக்கிசம் ஆகும். இதனைப் பேணிப்பாதுகாப்பது தமிழ்த்தேசிய
அரசியலில் அக்கறை கொண்ட அனைவரினதும் மிகப்பெரும் கடமையாகும்.