சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு
நடவடிக்கைகள் இராஜங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த 12 ஆம் திகதி தனது பெண் நண்பியுடனும் வேறு நண்பர்களுடனும் மதுபோதையில் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு
மாலை 6.00 மணியளவில் சென்று தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளில் நிற்க்
வைத்து தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தி இருக்கிறார் . தனது பாதணிகளை அரசியல் கைதிகளின் வாயினால் சுத்தப்படுத்துமாறும் வலியுறுத்தியிருக்கிறார்.
இந்த விவகாரம் இன்று இலங்கையில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. லொஹான் ரத்வத்தை அரசியலில் ஒரு தாதா போல் தொழிற்படுபவர். 2001 ஆம் ஆண்டு கண்டியில் முஸ்லீம் காங்கிரஸ்
ஆதரவாளர்கள் 10 பேர் கொலை செய்யப்பட்டமைக்கும் காரணமாக இருந்தவர் எனக் கூறப்படுகிறது.
வழக்கமாக தமிழ் அரசியல் கைதிகள் பாதிக்கப்படும் பொழுது தமிழ்
மக்களிடமிருந்து மட்டும் தான் எதிர்ப்புக் குரல்கள் வருவதுண்டு. ஆனால் இந்தத் தடவை சிங்கள அமைப்புக்கள், கட்சிகள் உட்பட சிங்கள அரசியல் தலைவர்களும் சமூக முக்கியஸ்தர்களும், காரசாரமாக இவ்விவகாரத்தைக் கண்டித்துள்ளனர். அவரை அனைத்துப்பதவிகளிலிருந்து நீக்கி உடனடியாக அவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்துமாறும் கோரியுள்ளனர். அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறுகின்ற காலமாக இருப்பதனாலும் ஐ.நா. பொதுச்சபையில் ஜனாதிபதி முதன்முதலாக
பேசுகின்ற காலமாக இருப்பதனாலும், இந்த விவகாரம் தொடர்பாக நன்றாகவே
ஆடிப்போயுள்ளது. இத்தாலிக்கு உத்தியோக பூர்வ விஐயத்தை மேற்கொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ச லொஹான் ரத்வத்தவை உடனடியாகவே சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
பதவியிலிருந்து இராஜினமா செய்யுமாறு கோரியுள்ளார். ஜனாதிபதி
கோத்தபாயவிற்கும் பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
லொஹான் ரத்வத்த சிறைச்சாலைகள் அமைச்சர் பதவியிலிருந்து மட்டும் இராஜினமா செய்துள்ளார் ஆனால் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் கைத்தொழில்
இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து இராஜினமா செய்யவில்லை. அரசாங்கத்தை சங்கடப்படுத்த விரும்பாததால் சிறைச்சாலைகள் அமைச்சர் பதவியிலிருந்து தான் விலகியுள்ளேன் என்றும் மற்றைய அமைச்சுப் பதவியில் தான் தொடர்ந்தும்
நீடிப்பேன் என்றும் லொஹான் ரத்வத்த கூறியுள்ளார். லொஹான் ரத்வத்தவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனப் பல பக்கங்களிலுமிருந்தும் கோரிக்கைகள் வந்த போதும் விசாரணைகள் எதுவும் பெரிதாக
நடந்ததாகத் தெரியவில்லை. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர யாராவது முறைப்பாடுகளை முன்வைத்தால் விசாரணைகளை மேற்கொள்வோம் எனக்
கூறியிருக்கிறார். சிறைக்கைதிகளைப் பாதுகாக்கும் அமைப்பு இது தொடர்பாக சி.ஐ.டி இடம் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவும் அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
யாழ்ப்பாண ஊடக மையத்தில் கடந்த 15 ஆம் திகதி ஊடகவியலாளர் மாநாடு
ஒன்றை நடாத்திய தமிழ் அரசியல் கைதிகளது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக சுயாதீனமாக விசாரணை ஒன்று நடைபெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதற்கான விசாரணைக்குழுவை ஜனாதிபதி அமைக்கும் வரை பாராளுமன்ற அமர்வுகளை தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க
வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். அதே வேளை தமிழ் அரசியல் கைதிகள்
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட வேண்டும் எனவும், அதற்கு முன்னதாக அவர்கள் தொடர்பாக வழக்குகள் உள்ள நீதிமன்றங்களிலேயே அவர்களை முற்படுத்தி
சிறைச்சாலையில் நடந்தவற்றை வெளிப்படுத்த வேண்டும் என்றும்
கூறியிருக்கின்றனர். தமிழ் அரசியல் கட்சிகளது பிரதிநிதிகள் குழு ஒன்று
உடனடியாக அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளது
நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ் அரசியல் தலைவர்கள் பருவகால பயிர்ச்செய்கைக்காலத்தில் மட்டும்
உற்சாகம் காட்டுவது போல கடுமையான கண்டன அறிக்கையை மட்டும் வெளியிட்டிருந்தனர்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்குச்
சென்று கைதிகளைச் சந்தித்து உரையாடியுள்ளனர். தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோகணேசன், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்
சிலருடன் அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று உரையாடியுள்ளார். துப்பாக்கி
வெடித்திருந்தால் புலிக்கதை ஒன்றையும் வெளியிட்டிருப்பார்கள் என்றும் அவர்
கூறியிருக்கிறார். கஜேந்திரகுமார் இவ்விவகாரம் தொடர்பாக விசேட பிரேரணை ஒன்றை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்
தமிழ்த்தேசியக் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் எவரும் கைதிகளைச்
சந்திக்கவில்லை. ஒரு சிலர் மட்டும் அறிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சுயாதீன விசாரணைகள் வேண்டும் அதற்க்கான விசாரணைக்குழுவை ஜனாதிபதி அமைக்கும் வரை
பாராளுமன்ற அமர்வுகளை பகிஸ்கரிக்க வேண்டும் என்ற தமிழ் அரசியல்
கைதிகளின் குடும்பத்தவர்களது கோரிக்கைகள் தொடர்பாக எந்த முயற்சிகளும் மேற் கொள்ளப்படவில்லை. அவர்களது ஒருங்கிணைந்த செயற்பாட்டை இவ்விவகாரத்தில்
முன்னெடுங்கள் என்ற கோரிக்கையும் தமிழ் அரசியல் கட்சிகளினால் உதாசீனம்
செய்யப்பட்டுள்ளது.
சந்திரிகா காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்து போரை முன்னின்று நடத்திய அனுரத்த ரத்வத்தவின் மகன் என்பதால் அரசாங்கமும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டுவது போலவே தெரிகின்றது.
பண்டாரநாயக்க குடும்பத்தைச் சேர்ந்த சந்திரிகா தங்களுடன் முரண்பட்டு நிற்கும் போது அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை ஒதுக்குவதற்கு இராஜபக்ச சகோதரர்கள் விரும்பாதிருக்கலாம்.
தன்னுடைய மைத்துனரின் இவ் மோசமான செயல்பற்றி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் இது வரை கருத்துக்கள் எவற்றையும் முன்வைக்கவில்லை . யாழ்ப்பாண மக்களை 1995 ஆம் ஆண்டு அவர்களது மண்ணிலிருந்து துரத்தியமைக்காக தனது தாய்மாமன்
அனுரத்த ரத்வத்தவிடமிருந்து ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் அமைக்கப்பட்ட மேடையில் வெற்றிச்சான்றுப் பத்திரத்தைப் பெற்றவர் அவர். இரத்த உறவு
என்பதால் மனித உரிமை மீறல்களை அவர் கண்டும் காணாமலும் இருந்திருக்கலாம்.
இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஹனாசிங்கமும் இவ்விவகாரம்
தொடர்பாக கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். “சர்வதேச ரீதியாக
ஏற்றுக்கொள்ளப்பட்ட மண்டேலா விதிகளின் பிரகாரம் சிறைக்கைதிகளின்
உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது” எனக்
கூறியுள்ளார். சர்வதேச மன்னிப்புச்சபையும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அமைச்சரை
விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனக் கேட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய – பசுபிக்கிற்கான இயக்குனர் யாமினி மிஸ்ரா இந்த வேண்டுகோளை
விடுத்துள்ளார். இலங்கையில் கைதிகள் நடாத்தப்படுவது குறித்த எங்களது கரிகனைகள் குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை
அதிகாரிகள் சித்திரவதை செய்வது மனிதாபிமானமற்ற விதத்தில் நடாத்துவது குறித்த கரிசனைகள் உண்மையானவை என்பதை இந்தச் சம்பவம் புலப்படுத்தியுள்ளது எனவும்
கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் குற்றவியல்
நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவது
காணப்படுவதை இது வெளிப்படுத்தியுள்ளது. எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் அவமானப்படுத்தப்பட்ட
இந்த விவகாரம் வெறுமனே அவர்களுடைய விவகாரம் அல்ல. இது தமிழ்த்தேசத்தின் சுயமரியாதை சம்பந்தமான விவகாரம். லொஹான் ரத்வத்த தலையில் துப்பாக்கியை
வைத்ததும் பாதணிகளை நாவினால் சுத்தப்படுத்தச் செய்ததும் தமிழ்த்தேசத்தை அவமரியாதைக்கு உட்படுத்துவதற்காகத்தான் . அரசியல் கைதிகளை தண்டிப்பதன் மூலம்
தமிழ்த்தேசத்தையே தண்டிக்க அவர் முற்பட்டிருக்கின்றார்.
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை இது தான் முதல் தடவை அல்ல. 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 25 ஆம் 27 ஆம் திகதிகளில் 53 தமிழ்
அரசியல் கைதிகள் குத்தியும் வெட்டியும் கோரமாகப் படுகொலை
செய்யப்பட்டுள்ளனர்.
மயில்வாகனம் என்ற 15 வயதுச் சிறுவன்
சிறைக்காவலரினாயே தலைமுடியில் இழுத்துவரப்பட்டு வெட்டப்பட்டு
கொல்லப்பட்டான். 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி பதுளை
பிந்தனுவ புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 தமிழ் அரசியல்
கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையை மேற்கொள்வதற்காக அன்றைய
தினம் இராணுவத்தினரும், பொலீசாரும் முகாம் காவலிருந்து அகற்றப்பட்டனர். இது தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் கூட
நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர். 2012 ஆம் ஆண்டு யூலை மாதம் 04 ஆம் திகதி வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளான நிமலரூபனும் டில்ருக்சனும் படுகொலை செய்யப்பட்டனர். இதே போன்று 1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலையில் தமிழ்
அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர். 2011 ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 65 தமிழ் அரசியல்
கைதிகள் சிறைக்காவலர்களினால் கொடுமையாகத் தாக்கப்பட்டடிருந்தனர்.
லொஹான் ரத்வத்தவால் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் இதன் தொடர்ச்சி தான் . இது ஒரு குற்றவியல் பிரச்சினையோ சட்டப்பிரச்சினையோ என்பதற்கு அப்பால் இது ஒரு அரசியல் பிரச்சினை என்பதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே தமிழ்த்தரப்பின் அணுகு முறை அதிக பட்சம் அரசியல் அணுகுமுறைகளாகவே இருக்க
வேண்டும். தமிழ்த்தரப்பு உடனடியாக பல நடவடிக்கைகளை முன்னெடுக் வேண்டியது அவசியமானதாகும். அதில் முதலாவது நடந்த விவகாரத்தை முதன்மைச்சான்றுகளுடன்
ஆவணப்படுத்தி தாயக மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பேசு பொருளாக்க வேண்டும் . தற்போது ஜெனிவா கூட்டத்தொடர் நடைபெறுகின்ற ஒரு காலம். அதுவும் அரசாங்கத்தின் மீது மென்மையான அணுகு முறைகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவை
பின்பற்றத்தொடங்கியிருக்கின்ற காலம். இக்காலத்தை சரியாகப் பயன்படுத்த
தமிழ்த்தரப்பு தயங்கக் கூடாது. உடனடியாக லொஹான் ரத்வத்தை கைது செய்யப்படல் வேண்டும். அமைச்சர் பதவியிலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்
பதவியிலிருந்தும் நீக்கப்படல் வேண்டும் என்பதை கோரிக்கையாக சர்வதேச மட்த்தில் முன்வைக்க வேண்டும்.
இரண்டாவது இந்த விவகாரத்தை தமிழ் அரசியல் கட்சிகள் தனித்தனியாக அணுகக் கூடாது. தேர்தல் நலன்களையோ கட்சி நலன்களையோ இங்கு முக்கியத்துவப்படுத்தக் கூடாது.
ஒருங்கிணைந்த அணுகு முறையையே பின்பற்றுதல் வேண்டும். அரசியல் கைதிகளது குடும்பத்தவர்கள் கேட்டுக்கொண்டது போல முதலில் சகல கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு
பிரதிநிதிகள் குழுவை உருவாக்க வேண்டும். இக்குழுவில் பொது அமைப்புக்களினது பிரதிநிதிகளையும் இணைத்துக் கொள்ளலாம். குறிப்பாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேலை இதில்
இணைப்பது அவசியமானது.
மூன்றாவது இந்தப்பிரதிநிதிகள் குழு முதலில் அனுராதபுரம்
சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளுடன் உரையாடி நடந்தவற்றை விபரமாகத் தொகுப்பதோடு அவர்களது நலன்கள் தொடர்பாக தொடர் கண்காணிப்பினை
மேற்கொள்ளுதல் வேண்டும்.
நான்காவதாக உலகு தழுவிய வகையில் ஒருவலுவான அரசியல் போராட்டத்திற்கு
தமிழ்த் தரப்பு தயாராக வேண்டும். ஜனாதிபதி கோத்தபாய துரிதப்படுத்துவதாகவும்
அதன் முடிவில் அவர்களுக்கு பொது மன்னிப்பை வழங்கப் போவதாவும்
கூறியிருக்கின்றார். இது காலத்தை நீடிக்கச் செய்யும் ஒரு செயற்பாடாகும் . இதனை முழுமையாக நிராகரித்து எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அனைவரும் விடுதலை
செய்யப்பட வேண்டும் என்பதை வற்புறுத்த வேண்டும்.
பொதுவாக யுத்தம் முடிந்து சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றபோது முதற் கட்டமாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதே
வழக்கமானதாகும். இலங்கையைப் பொறுத்தவரை இந்த சர்வதேச மரபு
பின்பற்றப்படவில்லை. அரசியல் கைதிகள் என்று கூறுவதற்கே அரசாங்கம் தயக்கம்
காட்டி வருகின்றது. இங்கு சிறையில் இருப்பவர்கள் தமது சொந்தப் பிரச்சினைக்காக சிறை சென்றவர்கள் அல்ல. மாறாக தமிழ் மக்களிற்க்கா சென்றவர்கள்.
இந்த உண்மையை சர்வதேச ரீதியாக வெளிப்படுத்த தமிழ்த்
தரப்பு தயாராக வேண்டும்.
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை என்பது முன்னரே கூறியது போல
தமிழ்த் தேசத்தின் அரசியல் பிரச்சினைகளில் ஒன்றாகும். இதனை முழுச் சமூகமும்
பொறுப்பெடுக்க வேண்டும். இவ்வாறு பொறுப்பெடுக்காவிட்டால் ஒரு நன்றியுள்ள சமூகமாக தமிழச் சமூகம் ஒருபோதும் இருக்கமாட்டாது.
தமிழ் அரசியல் கைதிகள் ஒரே நேரத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்
கொடுக்கின்றனர். அவற்றைத்தனித்தனியாக அணுகாது ஒன்று சேர்த்து அணுகுதல்
வேண்டும். அவர்களுக்கு சட்டப்பிரச்சினைகள் உள்ளன. குடும்பப்பிரச்சினைகள்
உள்ளன. இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்து பொருத்தமான மூலோபாயங்களையும்
தந்திரோபாயங்களையும் வகுத்து செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது. இதனூடாக
தமிழ் அரசியல் கைதிகள் தனித்தவர்கள் அல்ல என்ற நிலையையும் உருவாக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும்.