விசேட டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான வாரத்தை விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.டெங்கு நோயாளர்களின் கணிசமான அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர, கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.தொடரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு பரவும் அதிக ஆபத்துள்ள 70 வலயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை அதிகளவில் முன்னெடுப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.முப்படையினர், பொலிஸார், சுகாதார அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த டெங்கு ஒழிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் புள்ளிவிபரத்தின் அடிப்படையில், கடந்த வருடத்தில் 88 ஆயிரத்து 398 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டனர். கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியிருந்ததுடன், டெங்கு நோயினால் கடந்த வருடத்தில் மாத்திரம் 58 பேர் உயிரிழந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews