ஒருபுறம் நல்லிணக்க நாடகத்தை ஆடிக்கொண்டு மறுபுறம் தமிழ் மக்களுடைய காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோத விஹாரைகளை கட்டிக்கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் ஏவி விட்டுக்கொண்டு, காவல்துறையின் கட்டுக்காவலில் தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்து கொலை செய்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதியை மறுத்து, கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை மேற்கொண்டுவிட்டு விட்டு தமிழர் தாயகத்திற்கு வருகின்ற ரணில் விக்கிரமசிங்கவினுடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
நேற்றையதியம் குறித்த போராட்டத்தில் ஈடுபடுகின்ற பொழுது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார், அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த போராட்டம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வலியுறுத்துகின்ற ஒரு போராட்டம். ஆனால் இந்த ஜனநாயக போராட்டத்தின்மீது சிறிலங்காவின் காவல்துறையால் எதேச்சதிகாரமும் வன்முறையும் திட்டமிட்டு பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.
எங்களுடைய குரல்களை வெளியிலே கேட்கக் கூடாது என்பதற்காக எங்களுடன் போராடிக்கொண்டிருந்த பெண்களை தாக்கி இழுத்துச் சென்று, எங்களுக்கு முன்னால் ஒரு பேருந்தை விட்டு, எங்களுடைய முகங்கள் படங்கள் கூட வெளியே வரக்கூடாது என்ற நோக்கில் இலங்கையின் காவல்துறை மறித்துக்கொண்டிருக்கிறது.
இதிலிருந்து இலங்கையின் காவல்துறை ஜனநாயக குரல்களை நசுக்குவதற்கு இவ்வாறு செயற்படுகின்றவர்களை ஊடகங்களுக்கும் மக்களுக்கும் தெரியாத வகையில் எவ்வளவு தூரம் வன்முறையை பாவிப்பார்கள் என உலகம் புரிந்துகொள்ள வேண்டும்.
எந்தளவுக்கு எங்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டாலும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கின்ற வரை, சர்வதேச விசாரணை நடக்கின்ற வரை எங்களுடைய குரல்கள் ஓயாது. நாங்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம். ரணில் விக்கிரமசிங்கவினதோ, ராஜபக்சகளினதோ நாடகங்களுக்கு நாங்கள் ஒருபோதும் பலியாக மாட்டோம் என்றார்.