ஆளுநருடன் இணைந்து அடுத்த ஐந்து வருடங்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை சமர்பிக்குமாறு ஜனாதிபதி வவுனியாவில் தெரிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், ஜனாதிபதி செயலாளர், வட மாகாண பிரதம செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மூன்று மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான எதிர்கால திட்டங்கள், மாவட்டங்களில் எதிர்நோக்க்கப்படும் சவால்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது அரசாங்க அதிபர்களும், மக்கள் பிரதிநிதிகளும் எடுத்துக்கூறினார்.

கடந்த காலங்களை போலல்லாது இறுதியாக வெளியிடப்பட்ட சாதாரண, உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் முன்னிலை பெற்றுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இதன்போது கூறினார். ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில் மாகாண சுகாதார துறையினர் அதிகபட்ச முயற்சியை பயன்படுத்தி செயற்படுவதாகவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

ஏனைய மாகாணங்களை போல வடக்கு மாகாணத்தையும் அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதே தனது நோக்கு என அதிமேதகு ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். அத்துடன் யாழ்ப்பாணத்தை கல்விக் கேந்திர நிலையமாக மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மாகாண மட்டத்தில் இம்முறை நிதி ஒதுக்கீடுகள் முன்னேடுக்கப்பட்டுள்ளதால் அதனை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கூறினார். மாகாணத்தை அபிவிருத்தி அடையச் செய்வதற்காக கௌரவ ஆளுநருடன் இணைந்து செயற்றிட்டங்களை முன்மொழியுமாறும் ஜனாதிபதி தெரிவித்தார். வடக்கு மாகாணத்தை மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தி செய்யும் வலயமாக உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews