வவுனியாவில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கானர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற வைத்தியர் உள்ளிட்ட மூவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (08.01) அதிகாலை பொலிஸாரின் விசேட புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த மூவரையும் கைது செய்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இளைஞர் ஒருவர் புதையல் தோண்டும் ஸ்கானர் இயந்திரம் ஒன்றை விற்பனை செய்வதற்காக பொலிஸ் புலனாய்வு பிரிவு எனத் தெரியாது, புலனாய்வு பிரிவினரிடம் விலைபேசியுள்ளார். குறித்த ஸ்கானர் இயந்திரத்தை 15 இலட்சம் ரூபாய்க்கு விலை பேசிய அவர், கார் மற்றும் ஹயஸ் ரக வாகனம் என்பவற்றில் குறித்த ஸ்கானர் இயத்திரத்தை வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இதன்போது அங்கு நின்ற பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த ஸ்கானர் இயந்திரத்தை கைப்பற்றியதுடன், அதனை உடமையில் வைத்திருந்த வைத்தியர் உள்ளிட்ட மூவரையும் கைது செய்ததுடன், அவர்கள் பயணித்த வாகனத்தையும் மீட்டனர்.
34 வயதுடைய மதாவாச்சியை சேர்ந்த வைத்தியர், 38 வயதுடைய வவுனியா மணிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் மற்றும் வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டவர்களாவர்.
மீட்கப்பட்ட ஸ்கானர் இயந்திரம் மற்றும் கைது செய்யப்பட்ட மூவரும் வவுனியா பொலிஸ்சில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.