யாழ் பல்கலையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற பயங்கரவாதி நாவல் அறிமுகவிழா 

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஈழத்து எழுத்தாளரும், யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றிய செயலாளருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் அறிமுகவிழா இன்று 10.01.2024 புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கே.துவாரகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ். ரகுராம் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலையின் அரசறிவியல்துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி கே.ரி கணேசலிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
வரவேற்புரையினை கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரான யோ. நெவில்குமார் அவர்களும், வெளியீட்டுரையினை நாடக கலைஞரும் விமர்சகருமான அ. சத்தியானந்தன் நிகழ்த்தினார்.
நூலினை பேராசிரியர் ரகுராம் வெளியிட்டு வைக்க மாணவர் ஒன்றிய தலைவர் துவாரகன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்தும் சிறப்பு பிரதிகளை பேராசிரியர் கணேசலிங்கம் வழங்கி வைத்தார்.
தொடர்ந்து கலாநிதி ரகுராம் அவர்களின் பிரதம விருந்தினர் உரையும், கலாநிதி கே.ரி கணேசலிங்கம் அவர்களின் சிறப்பு விருந்தினர் உரையும் இடம்பெற்றது.
நூல் தொடர்பிலான விமர்சனவுரையினை   யாழ் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தி.செல்வமனோகரன் நிகழ்த்தினார்.
தொடர்ந்து நூலாசிரியரும், எழுத்தாளருமான தீபச் செல்வனின் ஏற்புரையினை தொடர்ந்து நன்றியுரையினை கலைப்பீட மாணவர் ஒன்றிய செயலாளரான சி.கிருஷ்ணராஜ் வழங்கினார்.
நூல் வெளியீட்டு விழாவில் மாணவர்கள், கல்வியலாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews