வடக்கு மாகாண ஆளுநரின் உழவர் திருநாள் வாழ்த்துச் செய்தி

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் நெற்செய்கையில் ஈடுபடும் உழவர்களின் திருநாளாம் தைப்பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அக மகிழ்வடைகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நெற்செய்கையில் ஈடுபடும் மக்கள் தமக்கு உதவிய இயற்கை தெய்வமாகிய சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் முகமாக பொங்கல் பொங்கி வழிபாடுகளை மேற்கொள்வது மரபு. அந்தவகையில், எமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நெற்செய்கை பாரிய பங்காற்றுகிறது என்பதில் எவ்வித ஐயமும்மில்லை.
 இயற்கை அனர்த்தங்களாலும், ஏனைய சில செயற்பாடுகளாலும் நெற்செய்கையில் ஈடுபடுவோர் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றமை கவலைக்குரியதே. எனினும், நாட்டு மக்களின் பசியை போக்க தாம் எதிர்நோக்கும் சவால்களை முறியடித்து உரிய விளைச்சலை பெற்று விவசாய துறைக்கு பாரிய உதவி புரியும் அனைவரையும் கௌரவித்து வாழ்த்துவதற்கான நாளாக இன்றைய தைப்பொங்கல் தினம் அமைந்துள்ளது.
மரபுசார்ந்த வழிபாடுகளுடன், இன நல்லிணக்கம், மத ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் இன்றைய நாளில் முன்னெடுக்கப்படும் ஏனைய கலை, கலாசார, விளையாட்டு  நிகழ்வுகளும் வரவேற்கப்படக்கூடியவை.
 அந்தவகையில் நாட்டின் முன்னேற்றம், சுபீட்சம் ஆகியவற்றிற்காக தம்மை அர்பணிக்கும் அனைவருக்கும் மீண்டும் தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அகமகிழ்வடைகின்றேன் என்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews