மாயமான பல்கலைக்கழக மாணவன்

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தோணி கவிழ்ந்த நிலையில் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் தோணியில் வலைவீசி மீன்பிடித்துக்கொண்டிருந்த போது வலை வெள்ள நீரில் இழுத்துச்செல்லப்பட்டபோது தோணி கவிழ்ந்துள்ளது.

இதன்போது நீரில் குறித்த இளைஞன் அடித்துச்செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு நீரில் அடித்துச்செல்லப்பட்டவர் கோட்டைக்கல்லாறை சேர்ந்த 25வயதுடைய சுசிதரன் தனூஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தின் இறுதியாண்டு மாணவன் எனவும் பல்கலைக்கழக விடுமுறையில் வீடு வந்திருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இளைஞன் காணாமல் போயுள்ளமை குறித்து களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த இளைஞனை தேடும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

தற்போது வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக பெரியகல்லாறில் முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ள நிலையில் ஆற்றின் நீரோட்டம் அதிகமாக இருப்பதன் காரணமாக மிகவும் சிரமத்திற்கு மத்தியிலேயே மீனவர்கள் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இளைஞன் இதுவரையில் மீட்கப்படாத நிலையில் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews