மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் அரச காணிகள் இன்மையால் தொடர்ச்சியாக கால்நடை வளர்ப்பாளர்கள் மேய்ச்சல் தரவை இன்றி பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
கால்நடை வளர்ப்பாளர்களின் அழைப்பின் பெயரில் நானாட்டான் பள்ளக்கமம் பகுதிக்கு நேற்று சனிக்கிழமை(13) மாலை விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் தலைமையிலான குழுவினர் கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மன்னார் நானாட்டான் பகுதியில் 15,000 க்கு மேற்பட்ட கால்நடைகள் காணப்பட்டு வருகின்ற நிலையில் ஒவ்வொரு வருடமும் மேய்ச்சல் தரவை இன்றி அதிக அளவு கால்நடைகள் இறந்து போவதோடு பல கிலோ மீற்றருக்கு அப்பால் வேறு பிரதேச செயலக பிரிவில் மேய்ச்சலுக்காக கொண்டு செல்ல வேண்டிய நிலையும் காணப்பட்டு வந்தது.
குறித்த பிரச்சினை தொடர்பில் பல முறை கால்நடை வளர்ப்பாளர்கள் மன்னார் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தெரியப்படுத்தியும் இதுவரை குறித்த பிரச்சினை தீர்க்க படாமலே காணப்பட்டது.
குறிப்பாக ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டம் ஒன்றில் கட்டுக்கரை குளத்தின் கீழ் காணப்படும் புல்லறுத்தான் காண்டல் பகுதி யுத்தத்திற்கு முன் மேய்ச்சல் தரையாக காணப்படதாகவும் தற்போது அது வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் காணப்படுவதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த நிலையில் குறித்த காணியை அடையாளப்படுத்தி மேய்ச்சல் தரவை க்கு ஒதுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்தியும் முன்னால் நானாட்டான் பிரதேச செயலாளர் உட்பட சில உயர் அதிகாரிகளின் அக்கறையின்மையால் குறித்த காணி விடுவிக்கப் பாடாததுடன் குறித்த அரச காணியை சிலர் அடாத்தாக பிடித்து காடுகளை அழித்து நெற்செய்கை மேற்கொண்டு வருவதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் குற்றம் சுமத்தி யிருந்தனர்.
இந்த நிலையில் பள்ளகமம் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் தலைமையிலான குழுவினர் நானாட்டான் பிரதேச செயலாளர் கனகாம்பிகை சிவசம்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர் சங்கத்தினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் அடிப்படையில் விரைவில் குறித்த பிரச்சினைக்கு தீர்வை பெற்று வருவதாகவும் அதே நேரம் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் மன்னார் நானாட்டான் கால்நடை வளர்ப்பாளர்கள்,சவாரி சங்க உறுப்பினர்கள்,கட்டுக்கரை திட்டமிடல் குழு அங்கத்தவதவர்கள்,கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது