ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரும் ஈழத்தமிழர் அரசியலும்

தென் இலங்கையின் அரசியல் சக்திகள் ஒரு போதும் வடக்கு கிழக்கு தமிழர்களது தேசிய இருப்பிற்கான பலத்தை உத்தரவாதப்படுத்தவில்லை. மாறாக காலத்திற்கு காலம் தமது அரசியல் அணுகுமுறைகளால் தமிழர்கரளை ஆக்கிரமித்ததுடன் அழிவையும் ஏற்படுத்தியவர்கள் என்பதை அவர்களே நிராகரிக்க முடியாது. ஆனால் ஈழத்ததமிழர்கள் தொடர்ச்சியாக விட்டுக் கொடுப்புக்களையும் ஒத்துழைப்புக்களையும் உடன்பாடுகளையும் அவர்களோடு மேற்கொண்டவர்கள். அனைத்தையும் அவர்களே மீறியதாக வரலாறு கூறுகிறது. 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி முறைமை அறிமுகமான பின்பு நிகழ்ந்த அனைத்து ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழர்கள் சிங்கள பெரும்பான்மை வேட்பாளர்களுக்கே வாக்களித்தவர்கள் என்பதை யாரும் நிராகரித்துவிட முடியாது. பலதடவை பகிஸ்கரிப்பும் செய்துள்ளார்கள். ஆனால் எந்த ஜனாதிபதியும் ஈழத்தமிழரது அரசியல் மீது உண்மையான விசுவாசத்தையோ அர்ப்பணிப்பையோ மேற்கொள்ளவில்லை. மாறாக வாக்குகளை பெற்றுவிட்டு தமிழரை நிராகரித்துடன் தமிழர் மீது போர் புரிவதற்கும் வழிவகுத்தவர்கள். அனைத்து சந்தர்ப்பத்திலும் ஈழத்தமிழரை படுமோசமான துயரத்திற்குள் தள்ளியவர்கள். அனைத்து பலமும் இருந்தும் ஏமாற்றுத்தனத்தையும் அழிவையுமே தமிழர் மீது ஏற்படுத்தியவர்கள் அதனாலேயே தமிழர் தமது வாக்குகளை தமது வேட்பாளருக்கு அளிப்பதன் மூலம் தமிழர் இறைமையை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற நிலையை பரிசீலிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

இத்தகைய தமிழ் வேட்பாளரது வாக்குப் பலத்தை தனித்து ஈழத்தமிழர் மட்டும் வழங்காது அவர்களுடன் சேர்ந்து அதிக நெருக்கடியை அனுபவிக்கும் ஏனைய தேசியங்களும் தமிழ் வேட்பாளரை ஆதரிக்கும் நிலை ஒன்றினை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்டு செயல்படும் இஸ்லாமிய இனத்தவர்களும் மலையகத் தமிழர்களும் அத்தகைய ஒத்துழைப்பினை சாத்தியமாக்குவார்களாயின் இலங்கைத்தீவில் பலமான ஒர் அரசியல் இருப்பினை இதர தேசியங்களால் ஏற்படுத்த முடியும். அதனை நோக்கி சிறுபான்மைத் தேசியங்கள் அதன் அரசியல் தலைமைகள் மற்றும் புலமையாளர்கள் சிந்திப்பது அவசியமானது. தவிர்க்க முடியாது அத்தகைய அணிதிரட்டல் சாத்தியமாகுமாயின் புரட்சிகரமான அரசியல் சூழலை இலங்கைத் தீவில் ஏற்படுத்த முடியும். ஈழத்தமிழர்களும், ஈழத்தில் வாழும் முஸ்லீம்களும், மலையகத் தமிழர்களும் ஒன்றிணைவது சாத்தியமாவது மட்டுமல்ல அதற்கான அவசியமும் தற்போது வேண்டப்படும் விடயமாக உள்ளது. சிறுபான்மைத் தேசியங்கள் தமக்கிடையே மோதுவதைவிடுத்து ஒன்றிணைந்து செயல்பட்டால் தென் இலங்கை தவிர்க்க முடியாது தீர்வுகளுக்கு போக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுவார்கள். அதற்கான புறச்சூழல் ஒன்றின் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு ஏற்படும். புறச்சூழல் அதிர்வடைய அகச்சூழல் வளைந்து கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படும்.

இதில் மூன்று தேசியங்களும் ஒன்றிணைந்து தமக்கான இருப்பினை கட்டமைக்க வேண்டும். நிலம், பொருளாதாரம், பண்பாடு என்பனவற்றை தனித்துவங்களுடன் பகிர்ந்து கொண்டு செயல்பட முடியும். தேசியங்களை பரஸ்பரம் ஏனைய தேசியங்கள் அங்கீகரிக்கும் நிலை பலமான அரசியல் இருப்பினை ஏற்படுத்தும். அதனை வெல்வதற்கு அரசியல் சக்திகளை மட்டும் சார்ந்திராது சிவில் மற்றும் மத நிறுவனங்கள் ஒன்றிணைய வேண்டும். அரசியல் கட்சிகளது எல்லை வரையறைக்கு உட்பட்டது. அவற்றின் இருப்பு முழுவதும் தேர்தலாலும் வாக்குகளாலும் திட்டமிடப்படுவது. நடைமுறையைவிட கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாககாட்டிக் கொள்வார்களே அன்றி நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல குடும்ப அரசியலையும் வர்க்க அரசியலையும் கட்டமைப்பதுடன் தனிநலன்களை முக்கியத்துவப் படுத்துவார்கள். அதனால் சிவில் தரப்புக்களும் மத அமைப்புக்களும் கனவான்களும் ஒன்றிணைந்து இத்தகைய திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். இதனால் சிறுபான்மை தேசியங்களுக்கிடையே நிலவும் முரண்பாடுகளும் பகைமைகளும் காணாமல் போய்விடும். கடந்தகாலத்தில் அதிக பகைப்புலத்துடன் செயல்படும் தேசியங்கள் தமக்கிடையிலான ஒன்றிணைவினால் ஆரோக்கியமான இருப்பினைத் தோற்றுவிக்கலாம். தென் இலங்கை அரசியல்வாதிகளும் தமது இருப்புக்கான தேடலை தனித்துவங்களுடன் நோக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும் சிறுபான்மைத் தேசியங்கள் கையாளப்படுகிறார்களே அன்றி அவர்களது இருப்பு பாதுகாக்கப்படுவதில்லை. ஒரு சந்தர்ப்பத்திலும் சிறுபான்மைத் தேசியங்கள் ஜனாதிபதி தேர்தலை கையாளவில்லை என்றே கூறவேண்டிய நிலை உள்ளது.

இதன் முடிபுகளை அரசியல் கட்சிகளிடம் விட்டுவிடுவதோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைத்துவிடுவதோ சரியான தீர்மானமாக அமையாது. அவர்கள் கட்சி நலனையும் தனிப்பட்ட நலனையுமே முதன்மைப்படுத்துவார்கள். அது கடந்த காலம் முழுவதும் கண்டுகொள்ளப்பட்ட முடிபுகளே. அதனால் சிவில் தரப்புக்கள் செயல்பட வேண்டும். அத்தகைய தரப்புக்களால் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும். அரசியல்கட்சிகள் வாக்களிக்க வேண்டும் என்று கூறுவதோ அல்லது பகிஸ்கரிக்கச் சொல்வதோ அது அவர்களது கட்சி சார்ந்த முடியும் நலனுமாகும். அவர்களது கட்சிக்குள்ளேயே ஜனநாயகம் இல்லாத சூழலில் தமிழ் மக்களிடம் எப்படி ஜனநாயகத்தை வெளிப்படுத்துவார்கள். சில கட்சிகளில் ஆயுட்காலத் தலைவர்கள் உள்ளனர். சிலகட்சிகளில் குடும்பத் தலைவர்கள் இருபட்பார்கள். இதுவே தமிழர் அரசியல் கட்சிகளின் அரசியல் தடம். அதனால் அவர்களை விட்டுவிட்டு சிவில் மற்றும் மத அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது தேவையாக உள்ளது. வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து தேசியங்களின் புலமையாளாட்களும் ஊடகங்னகளும் சிவில் அமைப்புகளும் மத அமைப்புகளும் இத்தகைய விடயம் தொடர்பில் கவனம் கொள்வதும் விவாதிப்பதும் அதிலிருந்து முடிபுகளை நோக்கி செயல்படுவதும் அவசியமானது. இவ்வாறு செயல்படத் தவறும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைத் தீவின் அரசியலையோ பொருளாதாரத்தையோ மாற்றத்திற்கு உள்ளாக்க முடியாத நிலை தவிர்க்க முடியாததாகும்.

ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் என்பது பாதிக்கப்பட்ட தரப்பிரிலிருந்து நிறுத்தப்பட வேண்டும். காரணம் இத்தகைய வேட்பாளர் தமிழ் தேசியத்தின் இருப்புடனும் அதன் மீதான நேசிப்பும் கொண்டவராக இருப்பதோடு எந்த அடிப்படையிலும் தமிழ் மக்களின் தேசியத்தை பலவீனப்படுத்தாதவராக அமைதல் வேண்டும். இவரது அரசியல் செல்நெறியால் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கோ அல்லது ஏனைய தேசியங்களுக்கோ எத்தகைய நெருக்கடியும் ஏற்படாத வகையிலுள்ளவராக இருத்தல் வேண்டும். இதனை ஒரு அரசியல் முதலீடாக எதிர்காலத்தில் கொள்ளாதவராகவும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எனவே தமிழ் வேட்பாளரது அரசியல் இருப்பு அவசியமானதென்றாக மாறியுள்ளது. அதனை தமிழ் அரசியல் கட்சிகளில் அனேகமான தரப்புக்கள் புரிந்து கொண்டுள்ளதாக தெரியவில்லை. மாறாக சிவில் மற்றும் மத அமைப்புக்கள் இதனை முன்னெடுக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமாக அமைவதுடன் வலுவான தேசியப்பற்றுடைய வேட்பாளராக அமைவது அவசியமானது. எந்த அரசியல் கட்சியின் உறுப்பினரும் வேட்பாளராக நிறுத்தப்படுவது பொருத்தமானதாக அமையாது. வடக்கு கிழக்கில் உள்ள பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து அத்தகைய வேட்பாளர் நிறுத்தப்படுவது அவசியமானது. இத்தகைய புரட்சிகரமான எண்ணத்தை அனைத்துத் தரப்பும் கைவிடுமாயின் வடக்கு கிழக்கில் வாழும் ஈழத்ததமிழர் மட்டுமல்ல ஏனைய தேசியங்களும் தங்களது தனித்துவத்தை பாதுகாக்க முடியாத நிலை தவிர்க்க முடியாததாகும். அதனை நோக்கியே அனைத்து சிறுபான்மை தேசியங்களும் பயணிக்கும் நிலை தவிர்க்க முடியாது ஏற்படும்.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

Recommended For You

About the Author: Editor Elukainews