பாரம்பரியமான பண்பாட்டையும் தாய் மொழியையும் கலைகளையும் காத்திட முன்வாருங்கள் என கலாநிதி ஆறு. திருமுருகன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அவர் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சைவத்தமிழ் மக்களின் பண்டிகைகளில் தைப்பொங்கல் விழா முதன்மையானது. இயற்கைத் தெய்வமாகிய சூரியனுக்கு பொங்கிப்படைத்து நன்றி சொல்லுவதுடன், பாடுபட்டு உழைக்கும் உழவர் பெருமக்களுக்கும் நன்றி கூறும் நாளாக இந்நாள் கருதப்படுகிறது.
முற்றத்தில் குடும்பமாகப் பொங்கிப் படைத்து உறவினர், நண்பர்களுக்கு உணவை பகிர்ந்து அன்பைப் பெருக்கும் பண்பாட்டு நாளாக தைத்திருநாளை எம்முன்னோர் காத்து வளர்த்தனர்.
எனவே அனைத்து மக்களும் வீட்டு முற்றத்தில் பொங்கிப் படையுங்கள். எமது பாரம்பரியமான இவ்விழாவைச் சிறப்பாகப் பேணி எமது தலைமுறை பின்பற்ற வழி செய்யுங்கள்.
எங்கள் மண்ணில், நீதியும், நிம்மதியும் நிலவ இறைவனை வேண்டுங்கள். பாடுபட்டு உழைப்பவர்களுக்கு மத்தியில் பணத்தைத் தேட போதைப் பொருட்களில் ஆர்வம் கொள்ளும் அநியாயம் அற்றுப்போக கடவுளை வேண்டுவோம்.
எங்கள் பாரம்பரியமான பண்பாட்டையும் தாய் மொழியையும். கலைகளையும் காத்திட சகல அமைப்புக்களும் பயன் நிறைந்த விழாக்களை ஏற்பாடு செய்து சமூகத்தை ஆற்றுப்படுத்துங்கள்.
வைத்தியசாலைகளிலும், சிறைக்கூடங்களிலும் துன்புறும் மக்கள் நன்மை பெற இந்நாளில் பிரார்த்தியுங்கள். அனைத்து அன்பர்களுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்தினையும் நல்லாசிகளையும் அமைகிறேன் – என்றுள்ளது.