நுளம்புக் குடம்பிகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதிலும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளிலே நாளாந்தம் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். மாகாண டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு கூட்டம், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் 775 டெங்கு நோயாளர்கள் யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த வருடம் முழுவதும் யாழ் மாவட்டத்தில் 3986 டெங்கு நோயாளர்களே பதிவாகியதுடன் ஆறு (06) மரணங்களும் பதிவாகியது. இதில் ஐந்து கடந்த டிசம்பர் மாதத்திலே பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட ஏனைய உள்ளுராட்சி நிறுவனங்கள் தங்களால் இயன்ற அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாக திணைக்களங்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், பொதுமக்கள் தங்களின் பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவதில்லை எனவும் அதிகாரிகள் கூறினார். இந்நிலையில், சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காத 1542 இடங்கள் கடந்த 12 ஆம் திகதி வரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 147 இடங்கள் தொடர்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கிராமப்புறங்களை விட படித்த சமூகம் அதிகமாக வசிக்கும் இடங்களிலே சூழல் பாதுகாப்பு மிக மோசமாக காணப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கமையை, சூழலை சுத்தமாக பேணாது நுளம்பு பரவும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இந்த செயற்பாடுகளுக்கு பொலிசாரின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளுமாறும், ஒவ்வொரு தெருவிலும் பொதுவான இடங்களில் குப்பை தொட்டிகளை வைத்து, அதனை உரியவாறு பராமரிக்குமாறும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார். இவ்வாறான செயற்பாடுகளில் பொதுமக்களை உள்வாங்கி உள்ளுராட்சி நிறுவனங்கள் செயற்பட வேண்டும் எனவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார். இதேவேளை பொதுமக்களும் சமூக பொறுப்புக்களை உணர்த்து செயற்படுவது இன்றியமையாததொன்றென வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews