மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் – நாமல் ராஜபக்சவின் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மொட்டுக் கட்சியின் சார்பில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்று (17) பத்தரமுல்லையில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தற்பொழுது மொட்டுக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்குவதற்கான நான்கு வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. அதில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரும் உள்ளது. கடைசிநேரத்தில் இந்தப் பட்டியலில் பெயர் இல்லாத புதிய நபர் ஒருவர் கூட களமிறக்கப்படலாம்.

எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய ஒருவரே வேட்பாளராக நியமிக்கப்படுவார். அதன் காரணமாக வேட்பாளர் குறித்து கவலைப்படத் தேவையில்லை. வேட்பாளர் யார் என்பது முக்கியமல்ல, வெற்றி பெற முடியுமா என்பதுதான் முக்கியம். ஏனெனில் எமது பிரதிநிதித்துவ முகாமை வெற்றிபெறச் செய்ய வேண்டியது அவசியமாகும்.

அத்துடன், எங்களது அரசியல் முகாமுக்கு வெற்றியைத் தரக்கூடிய பலம் கொண்டுள்ள எந்தக் கட்சி அல்லது சக்தியுடன் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.” என்றும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews