ஜோர்தான் நாட்டில் தொழிற்சாலை ஒன்று மூடப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக அங்கு பணியாற்றிய நூற்றுக்கணக்கான இலங்கைப் பெண்கள் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.
அந்த நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் குறித்த பெண்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளையோ அல்லது நாடு திரும்பவோ உதவும் இயலுமை இல்லாமையினால் குறித்த பெண்கள் செய்வதறியாது நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்திய மற்றும் பங்களாதேஷ் தொழிலாளர்களுடன் இணைந்து இந்த இலங்கைத் தொழிலாளர்கள் ஜோர்தானின் தொழிற்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. அதேவேளை இலங்கையர்களைத் தவிர ஏனைய நாட்டவர் தமது தூதரகங்கள் மூலம் தங்குமிட ஏற்பாடுகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
” அனைத்து தொழிலாளர்களும் அவதிப்படுகின்றனர், எனினும் தமது நாட்டைச் சேர்ந்த பணியாளர்களை மீட்டு அவர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் இயலுமை ஜோர்தானிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு இல்லை என நாங்கள் நம்புகிறோம்” என ஜோர்தானின் முன்னணி மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கூறுகிறது.
”ஜோர்தானில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களிடமிருந்து எமக்கு முறைப்பாடுகள் வரவில்லை.” என தலைநகர் அமானிலுள்ள தம்கீன் எனும் அமைப்பின் சட்டத்தரணி ஒருவர் கூறுகிறார். அந்த அமைப்பு ஜோர்தானில் பணியாற்றும் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளின் உரிமைகள் மற்றும் தொழிற்சங்கங்களை ஆதரிக்கிறது.
அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் நாட்டைவிட்டு ஓடியதால் ஊழியர்கள் ஊதியம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இதே நெருக்கடியை இந்திய மற்றும் பங்களாதேஷ் ஊழியர்கள் எதிர்கொண்டாலும், அவர்கள் தமது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் நம்பிக்கையுடன் அந்த தன்னார்வ அமைப்பை தொடர்பு கொள்ள தீர்மானித்தனர்.
ஜோர்தானின் ஷபாபி பகுதியில் செயற்பட்ட மூன்று ஆடைத் தொழிற்சாலைகளில் பணியற்ற குறைந்தபட்சம் 350 இலங்கைத் தொழிலாளர்கள் மூடப்பட்ட நிலையில் அங்கு சிக்கியுள்ளனர். அவர்கள் பணியாற்றிய அசீல் யுனிவர்செல் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நட்டமடைந்துள்ளது. மேலும் தம்து உரிமையாளர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறுகிறார். இதன் காரணமாக ஊதியம் கிடைக்காத தொழிலாளர்கள் நாடு திரும்ப முடியாமல் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
அங்கு வேலையிழந்த பெண்கள் விடுதிகள் மற்றும் அந்த நிறுவனத்தின் தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அங்கு சமூக ஊடகத் தகவல்களின் அடிப்படையில் அங்கு எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.
‘ வெளிநாடு வாழ் கதாநாயகர்கள்’கைவிடப்பட்டனர்
”இலங்கைக்கு எமது டொலர்கள் மாத்திரம்தான் வேண்டுமா?” என இலங்கைத் தூதரகத்திற்கு வெளியே கூடிய பெண்களிடம் ஒருவர் ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“எனக்கு போதுமான உணவில்லை, எனக்கு குடிநீர் இல்லை, கடந்த மாதம் நான் நோய்வாய்ப்பட்டேன். எனது வேதனைகளை எடுத்துக்கூற யார் இருக்கிறார்கள்?” என அவர் மேலும் கேள்வி எழுப்புகிறார். ”
அனைத்து வேலைகளும் செய்த பின்னர் எம்மை இங்கிருந்து வெளியேற்றினால், எங்களை யார் கவனித்துக்கொள்வார்கள்? இந்த நாட்டில் நாங்கள் நிராதரவாக விடப்பட்டுள்ளோம். இங்கிருக்கும் தூதரம் என்ன செய்கிறது? தூதரகத்தில் இருப்பவர்கள் சும்மா வந்து போகிறார்கள். எந்த உதவியும் இல்லை.”
கண்ணீருடன் உருக்கமான ஒரு வேண்டுகோள் ஒன்றையும் அவர் விடுத்துள்ளார். ”நான்கு மாதங்களாக ஊதியம் நிலுவையில் உள்ளது, ஏழு மாத சமூகப் பாதுகாப்பு கிடைக்கவில்லை. நாங்கள் எங்கள் உரிமைகளை மட்டுமே கேட்கிறோம். எங்களைப் பெயரளவிற்கு மட்டுமே ‘வெளிநாடு வாழ் கதாநாயகர்கள்’ என்று கூறுகிறார்களா? அந்த தொழிற்சாலை ஒரு மாதமாக மூடப்பட்டுள்ளது”.
அங்கு சிக்கியுள்ள பிரஜைகளை நாட்டிற்கு கொண்டுவரும் திட்டங்கள் எதையும் இலங்கை அரசு இறுதி செய்யவில்லை.
”இலங்கையர்களைப் பொறுத்தவரை, அவர்கள் வேலைவாய்ப்பு பணியகம் போன்ற உள்ளூர் முகவர்களிடம் பதிவு செய்த பிறகே ஜோர்தான் சென்றனர். சில அங்கு சுற்றுலா விசாவில் சென்று பணியாற்றுகின்றனர். முதலாவது பிரிவினர் தொடர்பில் எம்மால் பொதுவான வழிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும், ஆனால் இரண்டாவது பிரிவினரைப் பொறுத்தவரையில் விசேட தீர்மானம் ஒன்று எடுக்கப்பட வேண்டும்” என கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் ஜெகத் புஷ்பகுமார தெரித்தார்.
ஏற்கனவே ஜோர்தானிய தொழிற்துறை அதிகாரி முறைப்பாடு செய்துள்ளதாகவும் அமைச்சர்களிடம் கூறியுள்ளார்.
“ஒரு தொழிற்சாலை மூடப்படும் போது, தொழிலாளர்களுக்கு இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். அங்கிருக்கும் உரிய அதிகாரி இது தொடர்பில் தொழிற்சாலையிடம் முறைப்பாடு செய்துள்ளார் எனவே, உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்ட பின்னர் உரிய வழிமுறைகளை கடைபிடித்து சில இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.”
ஆனால் அங்கு சிக்கியுள்ள 350 பணியாளர்களின் நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்னதாக, இந்த ‘உரிய வழிமுறைகளை’ வகுத்து, காத்திரமான நடவடிக்கை திட்டம் ஒன்றை எடுக்க அரசுக்கு எவ்வளவு காலமாகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.