“அனைத்துலக நீதியின் மாண்பு தராசில் தொங்கிக்கொண்டிருக்கிறது” இவ்வாறு அனைத்துலக நீதிமன்றத்தில் வைத்துக் கூறியிருப்பவர் தென்னாபிரிக்காவின் பிரதிநிதி.காசாவில் இஸ்ரேல் புரியும் இனப்படுகொலைக்கு எதிராகத் தென்னாபிரிக்கா உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது. அந்த வழக்கின் தொடக்கத்தில் மேற்கண்டவாறு கூறப்பட்டிருக்கிறது. உலக நீதி மட்டுமல்ல மேற்கு நாடுகளின் அரசியல் அறமும் கூட தராசில் வைக்கப்பட்டிருக்கிறது. முழு உலகத்துக்கும் ஜனநாயகம் மனித உரிமைகள் போன்றவற்றின் மாண்பைக் குறித்து வகுப்பெடுக்கும் மேற்கு நாடுகளின் அரசியல் அறத்தை மிக இளைய ஜனநாயகங்களில் ஒன்று ஆகிய தென்னாபிரிக்கா கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.காசாவில் இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கும் பொழுதே,ரத்தம் காய முன்பே,தென்னாபிரிக்கா வழக்குத் தொடுத்திருக்கின்றது.அதுபோல ஏற்கனவே மற்றொரு ஆபிரிக்க நாடாகிய காம்பியா மியான்மரில் ரோஹிங்கா முஸ்லிம்களுக்காக நீதி கேட்டு 2019 ஆம் ஆண்டு அனைத்துலக நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது.
அனைத்துலக நீதிமன்றம் எனப்படுவது ஐநாவின் ஆறு பிரதான உறுப்புகளில் ஒன்று.ஐநாவின் நீதி பரிபாலனக் கட்டமைப்பு அது.ஐநாவின் ஏனைய உறுப்புக்கள் நியூயோர்க்கில் உள்ளன.ஆனால் அனைத்துலக நீதிமன்றம் நெதர்லாந்தின் தலைநகரமான ஹேக்கில் அமைந்துள்ளது.ஐநாவின் சுயாதீனமான உறுப்பாக அது கருதப்பட்டாலும் அதன் தீர்ப்புக்களின் அடுத்தடுத்த கட்டங்களைத் தீர்மானிப்பது ஐநா பொதுச் சபையும் பாதுகாப்புச் சபையுந்தான்.பாதுகாப்புச் சபையில் சக்திமிக்க நாடுகளுக்கு வீற்ரோ அதிகாரம் உண்டு.எனவே அங்கு விவாதிக்கப்படும் தீர்ப்புகளின் மீது சக்தி மிக்க நாடுகள் வீற்ரோ வாக்கைப் பிரயோகிக்க முடியும்.ரோஹியங்கா முஸ்லிம்களின் விடயத்தில் மியான்மருக்குச் சார்பாக சீனா அவ்வாறு வீற்ரோ வாக்கைப் பிரயோகித்திருக்கிறது.அதுபோலவே இஸ்ரேலுக்கு எதிரான ஐநா தீர்மானங்களின் போதும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக தன்னுடைய வீற்ரோ அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. ஐநாவின் வரலாற்றிலேயே அமெரிக்கா அதிகம் எண்ணிக்கையிலான வீற்ரோ வாக்குகளைப் பிரயோகித்தது இஸ்ரேலுக்கு ஆதரவாகத்தான் என்று ஒரு கணக்கு உண்டு.
எனவே ஐநாவின் உறுப்புக்களில் ஒன்று என்ற அடிப்படையில் அனைத்துலக நீதிமன்றம் ஐநாவுக்குள்ள எல்லா வரையறைகளையும் பலவீனங்களையும் இயலாமைகளையும் கொண்டிருக்கும். இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே, குறிப்பாக மியான்மருக்கு எதிராக கம்பியா தொடுத்த வழக்கின் கடந்த நான்கு ஆண்டுகால அனுபவத்தின் பின்னணியில் வைத்தே தென்னாபிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக தொடுத்திருக்கும் வழக்கையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ரோஹியங்கா முஸ்லிம்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக பொருத்தமான நீதி வழங்கப்படவில்லை.ஐநா உருவாக்கப்பட்டதிலிருந்து அது பெருமளவுக்கு இனப்படுகொலைகளின் பார்வையாளராகத்தான் இருந்து வந்துள்ளது.ஐநாவின் இயலாமையை,கையாலாகத்தனத்தை நிரூபிக்கும் ஆகப்பிந்திய இனப்படுகொலைக் களந்தான் காசா.தென்னாபிரிக்கா தொடுத்திருக்கும் வழக்கின்மூலம் பலஸ்தீனர்களுக்கு நீதி கிடைக்குமா?அல்லது அந்த வழக்கு ஐநாவின் கையாலாகத்தனத்தை மீண்டும் ஒரு தடவை நிரூபிக்குமா ?
ஏனெனில்,உலகில் தூய நீதி என்று எதுவும் கிடையாது இருப்பதெல்லாம் அரசியல் நீதிதான்.நீதிபதிகள் தனிப்பட்ட முறையில் நீதியாக நடக்கலாம். ஆனால் அந்த நீதியை நடைமுறைப்படுத்தப் போவது அரசுகள்தான். அரசுகள்,நலன்களின் அடிப்படையில்தான் முடிவுகளை எடுக்கும்.அரசியலில் அறம் நீதி என்பவையெல்லாம் கிடையாது. நிலையான ராணுவப் பொருளாதார நலன்கள்தான் உண்டு.அது சார்ந்த முடிவுகள்தான் உண்டு.அதனால்தான் அமெரிக்க அறிஞராகிய நோஆம் சொம்ஸ்கி பின்வருமாறு சொன்னார்.அரசியல் அறத்தைக் கடைப்பிடிக்கும் காலம் வரும்வரை இனப்படுகொலை என்ற சொல்லை அகராதியில் இருந்து எடுத்துவிடுவதே நல்லது என்று.
தென்னாபிரிக்கா தொடுத்திருக்கும் வழக்கு இஸ்ரேலுக்கு மட்டும் எதிரானது அல்ல. இஸ்ரேலை ஆதரிக்கும் எல்லா மேற்கு நாடுகளுக்கும் எதிரானதுதான். அனைத்துலக நீதிமன்றத்தை ஸ்தாபிக்கும்பொழுது அதில் முக்கிய பங்களிப்பை நல்கியது அமெரிக்காவும் பிரித்தானியாவுந்தான். அதே நாடுகள் இப்பொழுது தென்னாபிரிக்காவின் நகர்வை ஆதரிக்கவில்லை.எந்த ஒரு மேற்கத்திய நாடும் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் அனைத்துலக நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா தொடுத்திருக்கும் வழக்கை ஆதரிக்கவில்லை.
ஆனால் அதே மேற்கு நாடுகள்தான் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றன. இதை எப்படி விளங்கிக் கொள்வது?
இஸ்ரேலுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கும் தென்னாபிரிக்காவும் மியான்மருக்கு எதிராக வழக்குத் தொடுத்திருக்கும் காம்பியாவும் ஆபிரிக்கக் கண்டத்தில் உள்ளன.இந்த நாடுகள் எவையும் உக்ரைனில் ரஷ்யா முன்னெடுக்கும் ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து வழக்கு தொடுக்கவில்லை. அது மேற்கு நாடுகளுக்கு எதிரான ஆபிரிக்க நிலைப்பாடு.ரஷ்யா ஆபிரிக்க கண்டத்தை அதிகம் அரவணைத்து வைத்திருக்கின்றது.அங்குள்ள முன்னால் பிரெஞ்சுக் கொலனிகளில் நடக்கும் ராணுவச் சதிப் புரட்சிகளின் பின்னணியில் ரஷ்சியாவின் மறைகரங்கள் இருப்பதாக ஊகங்கள் உண்டு.
அதேசமயம் காசாவில் நடப்பது இனப்படுகொலை என்று சொல்லாத மேக்கு நாடுகள்,அதற்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கும் தென்னாபிரிக்காவை ஆதரிக்காத மேற்கு நாடுகள்,ரஷ்ய-உக்ரைன் போரில் ரஷ்யா இனப்படுகொலை செய்வதாகக் குற்றம் சாட்டின. போர் தொடங்கிய குறுகிய காலத்துக்குள்ளேயே அமெரிக்கா அதை இனப்படுகொலை என்று சொன்னது.அது ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாடு.
பேரரசுகள் மட்டுமல்ல சிறிய அரசுகளும்கூட அறம் சார்ந்து அரசியல் முடிவுகளை எடுப்பதில்லை. உதாரணமாக தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகிய பொழுது,பலஸ்தீனம் தமிழ் மக்களுடன் நிற்கவில்லை. பாலஸ்தீன அதிகார சபையானது மஹிந்த ராஜபக்சவின் நண்பனாகத்தான் காணப்படுகின்றது.2009க்கு பின்னர் 2014ஆம் ஆண்டு பாலஸ்தீனம் மகிந்தவிற்கு அந்த நாட்டின் உயர் விருதாகிய “பலஸ்தீன நட்சத்திரம்” என்ற விருதை வழங்கியது.அங்குள்ள வீதி ஒன்றுக்கும் அவருடைய பெயரைச் சூட்டியது. அதாவது ஈழத் தமிழர்களால் இனப்படுகொலை தெரிந்தவர் என்று குற்றச்சாட்டப்படும் ஒருவருக்கு பலஸ்தீனம் நாட்டின் உயர் விருதை வழங்கியிருக்கிறது.இதை எப்படி விளங்கிக் கொள்வது?
அப்படித்தான் கியூபாவும்.ஒரு காலம் போராடும் இயக்கங்களுக்கு அது முன்மாதிரியாக இருந்தது.ஈழப் போராட்ட இயக்கங்கள் சில தமது பொறுப்பாளர்களுக்கு கஸ்ட்ரோ என்று பெயர் வைத்தன.ஆனால் 2009க்கு முன்னரும் பின்னரும் குறிப்பாக ஐநாவில் கியூபா யாருடைய பக்கம் நிற்கின்றது? ஐநா தீர்மானங்களின் போது கியூபா அரசாங்கத்திற்கு ஆதரவாகத் தான் வாக்களித்து வருகின்றது.இதை எப்படி விளங்கிக் கொள்வது?
அதாவது மேற்கண்டவைகளைத் தொகுத்துப் பார்க்கும்போது தெளிவாக தெரிவது என்னவென்றால், சக்தி மிக்க நாடுகளோ அல்லது சிறிய நாடுகளோ எவையானாலும் அறத்தின் பாற்பட்டோ நீதியின் பாற்பட்டோ முடிவுகளை எடுப்பது குறைவு.பெருமளவுக்கு நிலையான அரசியல் நலன்களின் அடிப்படையில்தான் அவை முடிவுகளை எடுக்கின்றன.இப்படிப்பட்டதொரு குரூர உலகில் பலஸ்தீனர்களுக்கு அனைத்துலகை நீதிமன்றம் எப்படிப்பட்ட ஒரு நீதியை வழங்கும்?
தென்னாபிரிக்காவின் நகர்வை,ஆபிரிக்கக் கண்டத்தில் தற்பொழுது மேலோங்கிக் காணப்படும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான உணர்வுகளின் பிரதிபலிப்பாகவும் விளங்கிக் கொள்ளலாம்.எனினும் எல்லாவிதமான வாதப்பிரதிவாதங்களுக்கும் அப்பால் அது இனப்படுகொலைக்கு உள்ளாக்கி கொண்டிருக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவது.தாங்கள் தனித்துவிடப்படவில்லை என்ற உணர்வை அது அவர்களுக்கு கொடுக்கும். இந்த விடயத்தில் பலஸ்தீனர்கள் ஈழத் தமிழர்களை விடவும் பாக்கியசாலிகள் என்று கூறலாமா?
ஏனெனில்,இறுதிக்கட்டப் போரில் வன்னி கிழக்கில் தமிழ்மக்கள் சுற்றி வளைக்கப்பட்டிருந்தார்கள்.யாரும் உதவிக்கு வரவில்லை.எந்த ஒரு நாடும் உத்தியோகபூர்வமாக அவர்களை ஆதரிக்கவில்லை.தென்னாபிரிக்கா ஆதரிப்பதாகக் கூறப்பட்டாலும் நடைமுறையில் எதுவும் நடக்கவில்லை. தனது சேவைக் காலத்தில் தான் கண்ட மிக மோசமான நரகம் அதுவென்று அப்பொழுது ஐ.சி.ஆர்.சியின் தென்னாசியாவுக்குப் பொறுப்பான அதிகாரி கூறினார்.உதவிக்கு யாரும் வராத அந்த ஒடுங்கிய கடற்கரையில் தனித்து விடப்பட்டிருந்த தமிழ் மக்களுக்கு எதிராக உலகின் பெரும்பாலான நாடுகள் ஒன்றாக நின்றன.அல்லது ஈழத் தமிழர்களுக்கு எதிரான தரப்புக்களோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டுச் சேர்ந்திருந்தன.ஐநா போரில் நேரடியாகத் தலையிடாமல் விட்டதன்மூலம் இனப்படுகொலையை மறைமுகமாக அங்கீகரித்தது.
இந்தியாவும் சீனாவும் பிராந்தியத்தில் ஒன்றுக்கொன்று நட்பு நாடுகள் அல்ல. ஆனால் இரண்டு நாடுகளுமே ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒரே கோட்டில் நின்றன.இந்தியாவும் பாகிஸ்தானும் பிராந்தியத்தில் எதிரிகள். ஆனால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒரே கோட்டில் நின்றன. சீனாவும் அமெரிக்காவும் உலக அளவில் நடப்பு நாடுகள் அல்ல.ஆனால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இரண்டும் ஒன்றாக நின்றன.உலகில் பிராந்திய மட்டத்திலும் உலகளாவிய மட்டத்திலும் தங்களுக்கு இடையே பகைவர்களாகக் காணப்படும் நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒன்றாக நின்றன.அப்பொழுது எந்த ஒரு நாடும் அதை இனப்படுகொலை என்று கூறவில்லை.இப்பொழுதும் எத்தனை நாடுகள் கூறுகின்றன?அனைத்துலக நீதியின் மீது நம்பிக்கையிழந்த பின்னரும்கூட கடந்த 15 ஆண்டுகளாக விடாமல் போராடும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக வழக்குத் தொடுக்க இக்கொடிய உலகில் யாருண்டு?