- இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“நாட்டிலுள்ள ஒரு பிடி மண்ணையேனும் வெளிநாட்டுக்கு தாரை வார்க்க மாட்டோம் எனவும், விற்கப்பட்டுள்ள தேசிய வளங்கள் மீள பெறப்படும் எனவும் ராஜபக்ஷக்களும், அவர்களின் சகாக்களும் தேர்தல் காலங்களில் சூளுரைத்தனர். மறுபுறத்தில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட பங்காளிகளை களமிறக்கி சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில் இனவாதம் விதைக்கப்பட்டது. இதற்கு சிங்கள தேசியவாத அமைப்புகளும் துணைநின்றன.
ஆனால், இன்று என்ன நடக்கின்றது? தேசிய வளங்கள் விற்கப்பட்டுவருகின்றன. மேலும் பல இடங்கள் விற்கப்படவுள்ளன. வெளிநாட்டு முதலீடு என்ற போர்வையிலேயே இதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றன.
இவை தொடர்பான தகவல்களை நாம் அம்பலப்படுத்துவதால் மக்கள் தெளிவுபெற்று வருகின்றனர்.
அதேபோல் உண்மையான தேசப்பற்றுள்ள சில தேசியவாத அமைப்புகளும் தகவல்களை பகிரங்கப்படுத்திவருகின்றன. இதனால் அரச எதிர்ப்பு அலை உருவாகி வருகின்றது.
இந்நிலையில் மக்களைத் திசைதிருப்பி அரசைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பங்காளிக் கட்சிகள் வழமையான பாணியில் நாடகத்தை அரங்கேற்ற தொடங்கியுள்ளனர்.
20 ஆவது திருத்தச் சட்டம் வந்தபோது, இரட்டைக்குடியுரிமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இறுதியில் சரணடைந்து சம்மதம் தெரிவித்தனர். கொழும்புத் துறைமுக விவகாரத்திலும் இது நடந்தது.
அடுத்ததாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்திலும் எதிர்ப்பை வெளியிட்டனர். ஆனால் மேற்கு முனையம் வழங்கப்பட்டுவிட்டது.
தற்போது கெரவலப்பிட்டிய மின் உற்பத்தின் நிலையத்தின் பங்குகள் அமெரிக்கா வசம் செல்லவுள்ளன. உடன்படிக்கை கைச்சாத்திடும்வரை ‘கப்சிப்’ என இருந்துவிட்டு, இன்று வீராப்பு பேசுகின்றனர்.
தேசப்பற்றாளர்கள்போல் தம்மை காண்பித்துக்கொள்வதற்காக கோமாளி கூத்தாடுகின்றனர். இவர்களின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது.
அதேவேளை, முஸ்லிம் மக்களுக்கு எதிராக பல வழிகளிலும் அடக்குமுறைகளைக் கையாண்டவர்கள் மீண்டும் தமது கைவரிசையைக்காட்ட ஆரம்பித்துள்ளனர்.
சிறிது காலம் ஓய்வில் இருந்த ஞானசார தேரர் மீண்டும் இனவாதத்தை கையிலெடுத்துள்ளார். முஸ்லிம் மக்கள் தமது உயிரிலும் மேலாக கருதும் அல்லாவையே அவர் விமர்சித்துள்ளார். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
முஸ்லிம் மக்களுக்கு எதிரான வேட்டையின் மற்றுமொரு அங்கத்தின் ஆரம்பமா இது எனவும் கேட்க விரும்புகின்றேன்” – என்றார்.