தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தைப்பொங்கல் விழா சிறுதானியப் பொங்கல் விழாவாகச் சிறுப்பிட்டியில் இடம் பெற்றுள்ளது. சிறுப்பிட்டி ஜனசக்தி சனசமூகநிலைய முன்றலில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (21.01.2024) மாலை இராசபோசனம் என்னும் கருப்பொருளில் இப்பொங்கல்விழா கோலாகலமாக நிகழ்ந்துள்ளது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசனின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்துக் கற்கைகள் பீடத்தின் பேராசிரியர் கலாநிதி விக்னேஸ்வரி பவநேசன் பிரதமவிருந்தினராகவும், யாழ்ப்பாண மாவட்ட பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பொதுமுகாமையாளர் பொ. செல்வராசா சிறப்புவிருந்தினராகவும் கலந்து கொண்டிருந்தார்கள்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பாரம்பரிய உணவான சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இராசதானியம் என்ற திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
இத்திட்டத்தில் விவசாயிகளுக்குச் சிறுதானிய விதைகளை இலவசமாக வழங்கி அறுவடையின் பின்னர் அவர்களிடமிருந்து வழங்கிய விதைகளின் இரட்டிப்பு மடங்கு விதைகளை மீளப்பெற்று வேறு விவசாயிகளுக்கு வழங்குகின்றது. இதன் ஒரு படியாகவே அருகிப்போய்விட்ட சிறுதானிய உணவுப்பண்பாட்டை மீளுருவாக்கும் நோக்கில் தைப்பொங்கலைக் கிராமங்களில் சிறுதானியப் பொங்கல் விழாவாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு சிறுப்பிட்டி மேற்கில் ஜனசக்தி சனசமூக நிலையத்தினருடன் இணைந்து கொண்டாடியுள்ளது.
ஏராளமானோர் கலந்துகொண்ட சிறுதானியப் பொங்கல் விழாவில் உறியடி, வழுக்குமரம் ஏறுதல் ஆகிய பாரம்பரிய விளையாட்டுக்களோடு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தன. பங்கேற்ற அனைவருக்கும் வரகரிசிப் பொங்கலும், குரக்கன் கூழும் பரிமாறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.