வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை இந்த மாத வேதனத்துடன் வழங்குவதை நிறுத்தும் வகையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை உடன் அமுலாகும் வகையில் ரத்துசெய்வதாக அறிவித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வாறே, ஜனவரி மாதத்திற்கான, வழக்கமான வேதனத்துடன் குறித்த, மேலதிக கொடுப்பனவை பெறாத வைத்தியர்களுக்கு, விசேட வவுச்சர் மூலம், குறித்த கொடுப்பனவை வழங்குமாறு நிறுவன தலைவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் அறிவிப்பையடுத்து. நாளை காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருந்த தீர்மானத்தை உடன் அமுலுக்கு வரும் வகையில் கைவிடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்;தின் நிறைவேற்று சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி நடத்திய கலந்தரையாடலையடுத்து, தமக்கான மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் வைத்தியர்களுக்கான போக்குவரத்து மற்றும் வருகை கொடுப்பனவை 35 ஆயிரம் ரூபாவிலிருந்து 70 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு கடந்த 8 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டு வரம்பிற்குள் அதற்கான நிதியை வழங்குவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக திறைசேரி அறிவித்தமையினால் குறித்த கொடுப்பனவை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக முன்னதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுற்றறிக்கையொன்றை அனைத்து வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கும் அனுப்பியிருந்தார்.
இந்த தீர்மானத்தையடுத்து. தமக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ள மேலதிக கொடுப்பனவை இடைநிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், விசேட வைத்தியர்கள் சங்கம் மற்றும் அரச பல் வைத்தியர்கள் சங்கம் என்பன நாளைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்திருந்தன.
எவ்வாறாயினும், வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை இந்த மாத வேதனத்துடன் வழங்குவதை நிறுத்தும் வகையில் வெளியிடப்பட்ட முந்தைய சுற்றறிக்கையை உடன் அமுலாகும் வகையில் ரத்துசெய்வதாக அறிவித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிக்கையொன்றை வெளியிட்டதையடுத்து, பணிப்புறக்கணிப்பு தீர்மானத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கைவிட்டுள்ளது.