கனடாவில் தொழில்வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 6 கோடி ரூபாவுக்கும் அதிகளவான பணத்தை மோசடியாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பேலியகொடை மீன் சந்தையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவர், கனடாவில் தொழில்வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி வத்தளையின் குடாஏதன்ட வீதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 6,210,000.00 ரூபா பணம் பெற்றுக்கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் தொழில்வாய்ப்பை பெற்றுத்தர முடியாதென்று அந்தப் பெண் தெரிவித்த நிலையில், பணம் வழங்கிய நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியத்தில் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்படி 37 வயதுடைய திருமணமாகாத அந்தப் பெண்ணை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதுவரை அந்தப் பெண் தொடர்பாக 16 முறைப்பாடுகள் பணியகத்துக்கு கிடைத்துள்ளதாகவும் அந்த வகையில் இதுவரை அவர் 6 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.