பாரதநாட்டின் 75வது குடியரசு தின நிகழ்வு இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் தலைமையில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றுமுன்தினம் (26.01.2024) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்குமான பிணைப்பு என்பது நீண்டநெருங்கிய ஒன்றாக காணப்படுவதாக இதன்போது சிறப்புரை ஆற்றிய ஆளுநர் குறிப்பிட்டார்.
இலங்கை அனர்த்தங்களை எதிர்நோக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் உதவிக்கரம் நீட்டும் முதல் நண்பனாக இந்தியா திகழ்வதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
யுத்தத்தின் பின்னரான மீள்குடியேற்றம் , தொழில்வாய்ப்புகளை உருவாக்குதல் , வாழ்வாதார மேம்பாட்டு செயற்பாடுகள், கல்வித்துறைசார் உதவிகள் , சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் , பல்கலைக்கழக நலன்புரித்திட்டங்கள் உள்ளிட்ட இன்னோரன்ன செயற்பாடுகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.
இந்நிலையில் புதிய உயர்ஸ்தானிகராக பதவியேற்றுள்ள சந்தோஷ் ஜா அவர்களை கடந்தவாரம் சந்தித்த போது பல்வேறு விடயங்கள் குறித்து இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண கெளரவ ஆளுநர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பிணைப்பை தொடர்ந்தும் பேணவேண்டும் எனவும்
வடக்கு மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
பாரததேசத்தின் 75 ஆவது குடியரசு தினத்திற்கு வாழ்த்துகளையும் தனது சிறப்புரையின் போது ஆளுநர் தெரிவித்தார்.
வடக்கில் கடந்தகாலங்களில் இந்திய அரசினால் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள் காணொளியாக காட்சிப்படுத்தப்பட்டது
வடக்குமாகாண மேம்பாட்டிற்கு தேவையான உதவிகளை தொடர்ச்சியாக இந்தியா வழங்கும் என இதன் போது இலங்கைக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் தெரிவித்தார்.